சென்னை: கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் அபராத வட்டி, இஎம்ஐ வட்டி தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் நிலுவையில் உள்ள கடனை வசூலிக்க அவ்வப்போது அபராத வட்டி, இஎம்ஐ வட்டி மற்றும் இதர வட்டிகளை தள்ளுபடி செய்யும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம். இதன்மூலம் சங்க உறுப்பினர்கள் பயனடைந்து வந்தனர். கடைசியாக 2023-ம் ஆண்டு இதுபோன்ற வட்டித் தள்ளுபடிதிட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் 5,300 பேர் நிலுவைத் தொகையை செலுத்திவிட்டனர். ஆனால் அவர்களுக்கு இன்னமும் பத்திரம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், தற்போது நிலுவையிலுள்ள ரூ.1000 கோடி கடனை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிலுவைக் கடனை அபராத வட்டி, இஎம்ஐ வட்டி மற்றும் இதர வட்டிகளுடன் திருப்பிச் செலுத்த சங்க உறுப்பினர்கள் தயாராக இல்லை.
அனைவரும் அபராத வட்டி, இஎம்ஐ வட்டி உள்ளிட்ட வட்டித் தள்ளுபடி திட்டத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். இதன் காரணமாக, நிலுவைத்தொகையை சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலிக்க முடியவில்லை. அதனால் புதிய கடன்கள் வழங்க இயலாத நிலை நிலவுகிறது. இதன் விளைவாக, பெரும்பாலான சங்கங்கள் செயல்பட முடியாமல் முடங்கிப் போயுள்ளன.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் கடன் சுமையிலிருந்து விடுபடவும், சங்கங்களின் செயல்பாடுகள் சீராக இயங்கவும், புதிய கடன் வழங்கவும் வழிவகை செய்யும் வகையில், குறிப்பிட்ட கால அளவுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அபராத வட்டி உள்ளிட்ட வட்டித் தள்ளுபடி திட்டத்தினை தமிழ்நாடு அரசு அறிவிக்கும் என்று சங்க உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் எதிர்பார்ப்பின்படி, அபராத வட்டி, இஎம்ஐ வட்டி மற்றும் இதரவட்டி தள்ளுபடி திட்டத்தை அறிவிக்க வேண்டும். ஏற்கெனவே நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு பத்திரங்களை விரைந்து வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.