சாத்தூர்: கூட்டணி ஆட்சி என்கிற விஜயின் கருத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகத்தை கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகிற செப்.24ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகள் மற்றும் இருக்கன்குடி ஊர் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் சாத்தூரில் உள்ள தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது, ”ரூ.130 கோடி மதிப்பீட்டில் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது. ஒரே சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே அறங்காவலர்களாக இருப்பதை மாற்றி அனைத்து சாதியினரும் அறங்காவலர்களாக இடம் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் வரும் செப்.24ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி மதுரையில் நடைபெறும் 7-வது மாநில மாநாட்டில் தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். அதுவரையில் கிராமங்கள் தோறும் மாநாட்டுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக இனிக்கின்ற வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு அது கசப்பாக மாறிவிடுகிறது.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் மட்டும் தான் ஒற்றைக் கட்சி ஆட்சி முறை மற்றும் சர்வாதிகார ஆட்சி முறை, ஊழல் ஆட்சி முறை முடிவு வரும். 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் என்பதில் புதிய தமிழகம் கட்சி தெளிவாக இருக்கிறது. அதற்கு எந்த அரசியல் கட்சி முழுமையாக உடன்படுகிறதோ அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து இணைந்து செயல்படவதே புதிய தமிழகத்தின் நோக்கமாக இருக்கும்.
தவெக தலைவர் விஜய் இப்போது தான் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். பிரசாரத்தின் போது அவருடைய செயல்பாடுகளை ஆராய்ந்து ஒரு தெளிவான முடிவு எடுப்போம். ஆனால், கூட்டணி ஆட்சி என்கிற விஜயின் கருத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாட்டிற்கு அது தேவையான ஒன்று” என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
புதிதாக வரும் கட்சிகளை கட்டுப்பாடுகளை போட்டு முடக்க நினைக்கக்கூடாது. புதிதாக வரும் கட்சிகளை மீண்டும் மீண்டும் அடக்க நினைக்கும்போது அவர்களின் வளர்ச்சி அதிகமாகவே தவிர குறையாது” என்று கிருஷ்ணசாமி கூறினார்.