பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ, தென்மாவட்டங்களில் உள்ள கிராம மக்களைச் சந்திக்கும் பயணத்தை நடத்தி வருகிறார். வாக்காளர்களின் மனநிலை, கூட்டணி வியூகம் என பல்வேறு கேள்விகளுக்கு தனது பாணியில் ’ஷார்ப்பாக’ பதில் அளித்துள்ளார் டாக்டர் கிருஷ்ணசாமி.
கிராமங்கள் தோறும் சென்று மக்களைச் சந்தித்து வருகிறீர்கள். அவர்களது எண்ணம் உணர்வுகள் எப்படி இருக்கிறது?
கிராம மக்களின் வாழ்க்கையில், சொல்லும்படியான முன்னேற்றம் இல்லை. பல கிராமங்களில் குடிநீரையே விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலைதான் தொடர்கிறது. தெருக்களில் சாக்கடை ஓடுகிறது.
கிராம, ஏழை, எளிய மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகள் இல்லை. அரசு சொல்லக்கூடிய பெரும்பாலான திட்டங்கள் கிராம மக்களுக்கு சென்றடைந்ததற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. மொத்தத்தில், கடந்த நான்கரை வருட திமுக ஆட்சியில் எத்தரப்பு மக்களும் மகிழ்ச்சிகரமாக இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
ஆனால், பெரும்பான்மையான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?
அவர்கள் கொடுத்த 500 வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை உண்மையாகவே நிறைவேற்றி இருக்கிறார்கள். அது அடித்தட்டு மக்களிடத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஆதாரங்களோடு தெரிவிக்க தயாராக இருக்கிறார்களா?
திமுக ஆட்சியின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
கட்டுப்பாடற்ற கனிம வளக் கொள்ளை, அனைத்துத் துறைகளிலும் வரம்பற்ற ஊழல், படித்த கிராமப்புற, நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம், அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உட்பட பல வர்க்கத்தினருக்கு கொடுத்த வாக்குறுதிகள் காப்பாற்றப்படவில்லை. இவற்றை வைத்து திமுக ஆட்சியின் மதிப்பீடுகளை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
கொள்கை அரசியலை திரை கவர்ச்சி வீழ்த்தி விடுகிறது என பலமுறை ஆதங்கப்பட்டுள்ளீர்கள். ஆனால், அரசியலுக்கு வந்த விஜய்க்கு ஆதரவாக உங்கள் குரல் எழுகிறதே?
தமிழக மக்கள் கடந்த 60 வருடங்களாகத் திரைக் கவர்ச்சிக்கு ஆட்படுத்தப்பட்டுவிட்டார்கள். தமிழக அரசியலில் உள்ள பெரும்பாலானோர் திரைத்துறைப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, விஜய்யை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்துவது நியாயமாகுமா? அவர் தமிழகத்தில் ‘‘ஆட்சி – அதிகாரத்தில் பங்கு” என்ற கோஷத்தை முதல் முறையாக முன்வைக்கிறார்; அதுவே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
கரூர் சம்பவத்தை வைத்து விஜயை அரசியலில் இருந்து வெளியேற்ற திட்டமிடுகிறார்கள் என்று கூறியுள்ளீர்கள்.. யார் என்று கூற முடியுமா?
யார் என்பது தான் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறதே. 41 பேரின் இறப்பு சம்பவத்தைப் பயன்படுத்தி, அதன் முழுப் பொறுப்பையும் சந்தர்ப்பம் பார்த்து விஜய் மீது சுமத்தி, தங்களுடைய வன்மத்தைத் தீர்த்துக்கொள்ள யாரெல்லாம் எண்ணுகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததுதானே.
கரூரில் 41 உயிர்கள் இறப்பு சம்பவத்திற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என நினைக்கிறீர்கள்..
முதல் பொறுப்பு தமிழக அரசும், கரூர் காவல் துறையும்தான். அதோடு, நிகழ்ச்சியை சீர்குலைக்க ஏதாவது சதி நடந்துள்ளதா? அப்படியெனில் அவர்கள் யார்? நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடுகள், அவரது ஆதரவாளர்களின் கட்டுப்பாடற்ற செயல்கள் என அனைத்து அம்சங்களையும் நடுநிலையோடு விசாரித்து உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தேவை என்ற குரலை எழுப்புகிறீர்கள், திமுக, அதிமுக இதனை மறுக்கும் நிலையில், தவெக மட்டுமே கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறது. அப்படியென்றால் உங்கள் கூட்டணி சாய்ஸ் தவெக தானா?
கடந்த 60 ஆண்டுகாலமாக நிலவும் தி.மு.க., அ.தி.மு.க. என்ற ’ஒற்றை கட்சி ஆட்சி முறையே’ தமிழகத்தில் நிலவும் அனைத்து அவல நிலைகளுக்கும் காரணமாகும். தமிழகத்தில் 2026ல் கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் உண்மையான விடிவுகாலம் வரும் என்பதில் புதிய தமிழகம் கட்சி உறுதியாக இருக்கிறது.
பிரதான கட்சிகள் கூட்டணி ஆட்சிக்குத் தயார் இல்லை என்று இப்போது சொல்லிக் கொண்டாலும், தேர்தல் நெருங்க நெருங்கத் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு உண்டான கள சூழலே ஏற்படும். ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகிக்க வேண்டும் என்பதில் புதிய தமிழகம் கட்சி உறுதியாக இருக்கிறது. எனவே, தேர்தல் நேரத்தில் சரியான முடிவை எடுப்போம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இருக்கிறதா?
நாங்கள் எங்களது முடிவை ஜனவரியில் அறிவிப்போம்.
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என நாம் தமிழர் மற்றும் நல்லசாமி போன்ற விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தும் நிலையில் அதனை கடுமையாக எதிர்க்கிறீர்களே?
அவர் ‘நல்லசாமி’ அல்ல; கள்ளுச்சாமி. ‘கள்’ ஒரு போதைப்பொருள் என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளபோது, அவரைப் போன்றோர் அதை உணவுப் பொருள் எனக் கூறுவது அறிவுப்பூர்வமானது அல்ல. அனைத்துப் பெண்மணிகளும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனக் குரல் எழுப்பும்போது, மிக மிகக் குறுகிய நோக்கத்தோடு நல்லச்சாமி போன்ற சிலர் ‘கள்’ இறக்க வலியுறுத்துவது தமிழ் மக்களுக்கு எதிரானது, தமிழர்களை மீண்டும் அடிமைப்படுத்துவதற்கான மோசமான முழக்கம் அது.
இடதுசாரி சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சி தொடங்கியவர் நீங்கள். தமிழகத்தில் இடதுசாரிகள் செயல்பாடு தற்போது எப்படி இருக்கிறது?
கொஞ்ச காலம் ‘சேரி (Saree) கட்சியோடு’ கலந்து இருந்தார்கள். தற்போது ‘சாரி (Sorry) கட்சியோடு’ கரைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யத் தவறிய அரசியல், பொருளாதார, சமூகச் சமத்துவ, விடுதலைக்கான போராட்டத்தை புதிய தமிழகம் முன்னெடுத்துப் போராடி வருகிறது.