சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்துள்ளார். பின்னர் அவர், “2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ் மற்றும் வைகோ என வரிசையாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரின் மகன் துரை வைகோ ஆகியோர் சந்தித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரிக்க அவரின் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, முதல்வரின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார் என சொல்லப்படுகிறது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மு.க.முத்து மறைவு குறித்து துக்கம் விசாரித்தேன். அதோடு, முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் விசாரித்தேன். அவர் மருத்துவமனையிலும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருந்தார்.
கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். காவல்துறை என்ன தான் உடனுக்குடன் கைது நடவடிக்கை எடுத்தாலும், ஆணவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. இது குறித்து முதல்வரிடம் வலியுறுத்தினேன்.
2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.