கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அந்தக் கட்சிகள் வென்ற தொகுதிகள் உட்பட பல தொகுதிகளில் பாஜக-வினர் மூக்கை நுழைத்து தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருவதால் புதுச்சேரி என்டிஏ கூட்டணிக்குள் சலசலப்பு சத்தமாகக் கேட்கத் தொடங்கி இருக்கிறது.
2021 தேர்தலில் புதுச்சேரியில் என்ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி அமைந்தது. இதில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16 தொகுதிகளை தனக்காக எடுத்துக் கொண்ட என்.ஆர்.காங்கிரஸ், எஞ்சிய 14 தொகுதிகளை பாஜக-வுக்குத் தந்தது. அதில், அதிமுக-வுடன் தனியாக ஒப்பந்தம் போட்டுக் கொண்ட பாஜக, 9 தொகுதிகளை தனக்காக வைத்துக் கொண்டு எஞ்சிய 5 தொகுதிகளை அதிமுக-வுக்கு விட்டுக் கொடுத்தது. ஆனால், போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் அதிமுக தோற்றுப் போனதால் தேர்தலுக்குப் பிறகு அந்தக் கட்சியை பாஜக-வும் என்.ஆர்.காங்கிரஸும் அடியோடு மறந்துவிட்டன..
இப்போது தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. கட்சிகள் என்று சொல்வதைவிட அனைத்துக் கட்சிகளிலும் உள்ள முக்கிய தலைகள் அவர்களாகவே தங்களுக்கான தொகுதிகளை தேர்வு செய்து அங்கெல்லாம் தேர்தல் கண்ணோட்டத்தில் காரியமாற்றி வருகிறார்கள். அதில் தான், என்டிஏ கூட்டணியில் ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளிலும் பாஜக-வினர் களமிறங்கி தேர்தல் ஆயத்தப் பணிகளில் ஆர்ப்பாட்டம் காட்டி வருவதாக புலம்பல்கள் கேட்கின்றன.
பாஜக அமைச்சரான ஜான்குமார் கடந்தமுறை காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால், இப்போது அவர் அந்தத் தொகுதியை லாட்டரி அதிபர் மார்டினின் மகன் ஜோஸ் சார்லஸுக்காக தானாகவே ஒதுக்கித் தந்துவிட்டு, அதற்குப் பதிலாக கடந்த முறை பாஜக-வால் அதிமுக-வுக்கு விட்டுத்தரப்பட்ட முதலியார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் திட்டத்துடன் அங்கே தனக்கான அலுவலகத்தைத் திறந்திருக்கிறார். இது அங்கிருக்கும் அதிமுக தலைகளை அப்செட்டாக்கி இருக்கிறது. ஜான்குமார் மட்டுமல்லாது அவரது மகன்களில் ஒருவர் நெல்லித்தோப்பிலும் இன்னொருவர் பாகூர் தொகுதியிலும் களமிறங்கும் திட்டத்துடன் தேர்தல் வேலைகளைத் தொடங்கி இருப்பது பாஜக-வினரையே முணுமுணுக்க வைத்துள்ளது..

என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சரான லட்சுமி நாராயணன் கடந்த முறை ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால், இப்போது அங்கே பாஜக மாநிலத்தலைவர் ராமலிங்கம் மக்களுக்கான நல உதவிகளை வழங்கி தொகுதியை தனக்காக தயார்படுத்தி வருகிறார். இது லட்சுமி நாராயணன் தரப்பை சூடாக்கி வருகிறது.
இதேபோல், அண்மையில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பாஜக-வைச் சேர்ந்த சாய் ஜே.சரவணன்குமார் உசுடு தொகுதியில் போட்டியிட தயாராவதுடன், கடந்தமுறை என்.ஆர்.காங்கிரஸுக்கு தரப்பட்ட திருபுவனை தொகுதியில் தனது மனைவியை நிறுத்த திட்டம் வகுத்து அங்கே மக்களுக்கான நல உதவிகளை வாரி வழங்கி வருகிறார்.
இப்படி, கடந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட பல தொகுதிகளில் யாருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்காமல் பாஜக-வினர் தங்கள் இஷ்டத்துக்கு பவர் பாலிடிக்ஸ் செய்துவருவது என்டிஏ கூட்டணிக்குள் ஏகத்துக்கும் புகைச்சலைக் கிளப்பி இருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன், “கடந்த முறை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இப்போது பாஜக-வினர் தாங்கள் போட்டியிடப் போவதாகச் சொல்லியே நல உதவிகளை வழங்கி வருகிறார்கள். இது கூட்டணியை பலவீனப்படுத்தும். இது மேலும் தொடராமல் இருக்க கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை அழைத்துப் பேசும்படி கூட்டணிக்கு தலைவரான முதல்வர் ரங்கசாமியிடம் சொல்லி இருக்கிறோம்” என்றார்.
கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக-வினர் தங்கள் இஷ்டத்துக்கு தேர்தல் ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருப்பது கூட்டணிக்குள் தேவையற்ற குழப்பத்தை உண்டாக்காதா என மாநில பாஜக தலைவர் ராமலிங்கத்திடம் கேட்டதற்கு, “நாங்கள் அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் கட்சியை வலுப்படுத்துகிறோம். அதன் மூலம் அனைத்துத் தொகுதிகளிலும் கூட்டணிக் கட்சிகளுக்கும் சப்போர்ட்டாக இருப்போம். கூட்டணியில் இருக்கும் அனைவரும் வேலை செய்தால் தான் தொகுதியை எந்தக் கட்சிக்கு ஒதுக்கினாலும் எங்கள் கூட்டணி வெற்றிபெற முடியும்.
இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் 30 தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்கி இருக்கிறோம். அமைச்சர் லட்சுமி நாராயணன் மீண்டும் ராஜ்பவன் தொகுதிக்கே வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொண்டு அவருக்காக வேலை செய்வேன். எக்காரணம் கொண்டும் தலைமையின் கட்டளையை மீறி நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்” என்றார். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், விநோதமான முடிவுகளை எடுத்தே பழகிவிட்ட புதுச்சேரி அரசியல்வாதிகள் இந்த சட்ட திட்டத்திற்கெல்லாம் கட்டுப்பாடுவார்களா?