நடிகர் விஜய் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அவரால் விமர்சிக்கப்படும் பாஜக-வினரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி என்றால் அது தவெக தலைமையில் தான். விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என திடமாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது தவெக செயற்குழு. இந்த நிலையில், தவெக-வின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூகஊடகப் பிரிவு துணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் ‘இந்து தமிழ்திசை’க்காக பேசினோம்.
2 கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டிவிட்டதா தவெக?
மற்றகட்சிகளைப் போல் போலி கணக்குக் காட்டாமல் வாக்காளர் அட்டையை அடிப்படையாக வைத்து இதுவரை 80 லட்சம் பேரை கட்சியில் சேர்த்துள்ளோம். விரைவில் 2 கோடி உறுப்பினர்கள் இலக்கை எட்டுவோம். இப்போது 5 சதவீத இளைஞர்கள் கூட திமுக-வுக்குச் செல்ல ஆர்வம் காட்டவில்லை. அங்கே உரிய மரியாதை கிடைக்காது என்பதால் இளைஞர்கள் பெருவாரியாக தவெக-வை நோக்கி வருகிறார்கள்.
புஸ்ஸி ஆனந்தைச் சுற்றியே தவெக இருக்கிறதே… தேர்தல் அரசியலில் ஒன்மேன் ஷோவெல்லாம் சரிப்பட்டு வருமா?
எந்தக் கட்சியாக இருந்தாலும், முதலில் தலைவர், அடுத்து பொதுச் செயலாளர் தான். எனினும் ஆனந்தைச் சுற்றியே தவெக இருக்கிறது என்பது உண்மை கிடையாது. எல்லாருக்குமான வேலைகளை அவர் பிரித்து வழங்குகிறார். திமுக தான் இதுபோன்ற பொய்ப் பிரச்சாரத்தை செய்துவருகிறது.
தலைவர் விஜய்யை எளிதில் சந்திக்க முடியாத அளவுக்கு தங்களுக்கே தடுப்பு வேலிகள் இருப்பதாக தவெக தம்பிகள் புலம்புகிறார்களே?
ரசிகர் மன்றம் தொடங்கியது முதல் இதுவரை விஜய் எல்லோரையும் வழக்கம் போலவே சந்தித்து வருகிறார். முதல்வர் ஸ்டாலினை, திமுக அமைச்சர்கள் எத்தனை பேர் எளிதில் தொடர்பு கொள்ள முடிகிறது? ஆனால், எந்தெந்த இடைவெளியில் யாரைச் சந்திக்க வேண்டுமோ, அதை சரியாகச் செய்து கொண்டிருகிறார் விஜய். இப்போது மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பை அதிகம் நடத்தி வருகிறார்.
விஜய்யின் அரசியல் நிகழ்ச்சிகள் எல்லாம் சினிமா ஷூட் போலவே நடந்து கொண்டிருப்பதாக தெரிகிறதே… எப்போது தான் இயல்புக்கு வருவார்?
பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உட்பட எல்லாமே இயல்பானதுதான். எதையுமே நாங்கள் மிகைப்படுத்தவில்லை.
எம்ஜிஆர் திமுக-வில் பொருளாளராக இருந்து அரசியல் படித்து அதன் பிறகு தனிக் கட்சியைத் தொடங்கி வெற்றிகண்டார். ஆனால், விஜய் சினிமாவில் இருந்து நேரடியாக அரசியலுக்கு வந்திருப்பதால் அனுபவம் போதவில்லை என்கிறார்களே?
மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் இருந்தால் போதும். அரசியலுக்கு அனுபவம் என்பது ஒரு தேர்தலை கடந்துவிட்டால் வந்துவிடும். அதற்காக, இன்னொரு கட்சியில் இருந்துவிட்டு தான் வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அர்விந்த் கெஜ்ரிவால் கட்சி ஆரம்பித்ததுமே தேர்தலைச் சந்தித்து ஆட்சிக்கு வரவில்லையா? எங்கள் கட்சியினருக்குக்கூட ஏற்கெனவே உள்ளாட்சி தேர்தலை சந்தித்த அனுபவம் இருக்கிறது.
திமுக-வின் 50 சதவீத வாக்குகளை இம்முறை தவெக இழுத்துவிடும் என்கிறதே பாஜக?
ஒராண்டுக்கு முன்பு வரை தவெக-வுக்கு 8 சதவீத வாக்குகள் என்றார்கள். ஆனால், இப்போது எங்களுக்கு 24 சதவீத வாக்குகள் இருப்பதாக திமுக சார்பு ஊடகங்களே சொல்கின்றன. அப்படிப் பார்த்தால் பாஜக சொல்வது போல் திமுக-வின் 50 சதவீத வாக்குகள் இம்முறை தவெக-வுக்கு மாறும். குறிப்பாக, திமுக மீது ஏமாற்றத்தில் உள்ள சிறுபான்மையினர், மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஆகியோரின் வாக்குகள் தவெக வசமாகும்.
மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைக்கும் வேலைகளில் மும்முரமாக இருக்கையில் தவெக சைடில் அதற்கான முகாந்திரம் எதுவும் தெரியவில்லையே?
தவெக புதிதாக வந்த கட்சி. நாங்கள் திடீரென யாருடனும் கூட்டணி சேர முடியாது. கொள்கைகள், முயற்சிகள், மாற்றத்தைக் கொண்டு வர நினைப்பது என அனைத்து வகையிலும் நாங்கள் புதியவர்கள். அதனால், எங்கள் கொள்கைக்கு சிக்கல் வராத கட்சிகளுடன்தான் கூட்டணி வைக்க முடியும். கொள்கையில் மாறுபட்டவர்களுடன் கூட்டணிக்குப் போக வேண்டிய அவசர தேவை இப்போதில்லை. அதற்கான காலம் இன்னும் இருக்கிறது. அதேசமயம், பாஜக, திமுக, அதிமுக-வுடன் கூட்டணி இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறோம்.
தவெக உடன் பாமக, விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைக்க வாய்ப்பிருப்பதாக ஒரு செய்தி சுற்றுகிறதே?
ஒத்த கருத்துடைய கட்சிகளாக இருக்க வேண்டும். நாங்களும் கொள்கை அளவில் எந்த சமரசமும் செய்து கொள்ளவும் மாட்டோம். கொள்கையில் சமரசம் செய்து தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. திமுக, அதிமுக-வை விட அதிக வாக்கு வங்கி உள்ள கட்சியாக தவெக தற்போது இருக்கிறது. அதனால், கூட்டணி குறித்த அறிவிப்பை சரியான நேரத்தில் விஜய் அறிவிப்பார். அதுவும் கொள்கை அளவில் சமரசம் ஆகாத கட்சிகளுடன் தான் கூட்டணியும் அமையும்.
ஊழல் என்று பார்த்தால் அதிமுக-வும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படி இருக்கையில் திமுக-வை மட்டும் தவெக கடுமையாக தாக்குவது ஏன்?
திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. அதனால் அவர்களை, அவர்களின் செயல்பாடுகளை எதிர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேசமயம், அதிமுக-வின் செயல்பாடுகளையும் தேவையான இடங்களில் தவெக கண்டிக்கவே செய்கிறது.
அதிமுக-வை விஜய் சீண்டாமல் இருப்பதற்குக் காரணம், எம்ஜிஆர் விசுவாசிகளை தன் பக்கம் ஈர்க்கத்தான் என்கிறார்களே?
எம்ஜிஆரின் விசுவாசிகள் ஏற்கெனவே கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக-வை விட்டு நகரத் தொடங்கி விட்டார்கள். அதேசமயம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா விசுவாசிகள் அதிமுக-வில் மிகுந்த மனப்புழுக்கத்தில் இருக்கிறார்கள். எனவே, எங்கு செல்ல வேண்டும், யாருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அவர்கள் தெளிவாகவே முடிவெடுப்பார்கள்.
நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சியுடன் (பாஜக) கூட்டணி சேர்ந்திருப்பதாக இபிஎஸ் சொல்லி இருப்பதைக் கவனித்தீர்களா?
தங்கள் கூட்டணி குறித்து என்ன விளக்கம் வேண்டுமானாலும் அவர்கள் கொடுக்கலாம். ஆனால், மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா என்று பார்க்க வேண்டும். அவர்களின் கூட்டணி நிலைப்பாட்டை அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா என்பதே சந்தேகம்?
கடைசி நேரத்தில் பாஜக கூட்டணிக்கு குட்பை சொல்லிவிட்டு தவெக பக்கம் அதிமுக திரும்பிவிடும் என்கிறார்களே?
எங்கள் தலைவர் தான் முதல்வர் வேட்பாளர். தவெக தலைமையில் தான் கூட்டணி. எங்களுடன் கொள்கை அளவில் இணக்கமாக வரும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம். தவெக-வுடன் எந்தெந்த கட்சிகள் ஒத்த கருத்துடன் இருக்கிறதோ அவர்கள் வரலாம். அதிமுக-வும் அப்படி இருக்கிறதா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
அதிமுக உங்கள் கூட்டணிக்கு வந்தால் முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்ற நிபந்தனையை தவெக தளர்த்திக்கொள்ளுமா?
இதுபோன்ற பேச்சுவார்த்தையே வரக்கூடாது என்பதற்காக தான் இப்போதே முதல்வர் வேட்பாளராக விஜய்யை அறிவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
தனது எதிரி என பாஜக-வை சொல்கிறார் விஜய். ஆனால், விஜய் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என எதற்கும் தயாராய் இருக்கிறதே பாஜக?
அரசியல் கணக்குப் போடுபவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். தேர்தலில் அரசியல் கணக்குப் போட்டு, வெறும் எண்ணிக்கை அளவில் வெற்றி பெற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். அதற்கான ஆள் விஜய்யும் கிடையாது; தவெக அதுமாதிரியான கட்சியும் அல்ல.
அதிமுக-வை நிர்பந்தப்படுத்தி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்த பாஜக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி என்ற நிர்பந்தத்தைக் கொடுக்கும் போல் தெரிகிறதே?
ஏற்கெனவே, கூட்டணி ஆட்சி தான் என பாஜக அறிவித்திருக்கிறது. ஆனால், அதை வைத்து வார்த்தை ஜாலங்களில் பாஜக விளையாடி வருகிறது. அவர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால், அவர்களின் ஆசை கூட்டணி ஆட்சி தான்.
தனித்தே நின்று வெற்றிபெற்ற வரலாற்றைக் கொண்ட அதிமுக-வையும் கூட்டணி ஆட்சி பற்றி பேச வைத்துவிட்டதே பாஜக?
50 சதவீதத்துக்கு மேல் வாக்கு வங்கியுடன் அதிமுக-வை ஜெயலலிதா விட்டுச் சென்றார். தற்போது அது 20 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதன் பிறகும் அதிமுக தேய்ந்து கொண்டே தான் போகும். எனவே, அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிக்குச் செல்வார்கள்.
தங்களுடன் கூட்டணி வைத்த கட்சிகளை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று சொல்வதை ஏற்கிறீர்களா?
பாஜக-வின் கடந்தகால வரலாறே இதுதான். பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் எல்லாமே கூட்டணி கட்சிகளை அவர்கள் கபளீகரம் செய்து வருகிறார்கள்.
கட்சி ஆரம்பித்து இன்னும் ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத நிலையில், தவெக-வினரும் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்களே?
தவெக-வின் செயல்பாடுகளை பார்த்து திமுக, எங்கள் நிர்வாகிகளைப் பற்றி பலவாறு பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறது. எங்கு எந்தப் பிரச்சினை நடந்தாலும், அதை தவெக-வுடன் இணைத்து பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள். தருமபுரி சம்பவத்தில் கூட, அந்த நபரை தவெக நிர்வாகி என்றார்கள். ஆனால், அவர் தவெக-வில் உறுப்பினர் கூட கிடையாது என மாவட்டச் செயலாளர் தெளிவாக கூறிவிட்டார்.
தவெக-வில் பொறுப்பாளர் நியமனங்களில் நிர்வாகிகளுக்குள்ளேயே பிரச்சினைகள் வெடிக்கிறதே?
கட்சியில் பெரிய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் 120 மாவட்டங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். 3 லட்சம் பேருக்கு பொறுப்புகளை வழங்கும் போது, ஒரு சில இடங்களில் ஏற்படும் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் கட்சி தலைமை பேசி சரி செய்து, தகுதியானவர்களுக்கு பொறுப்புகளை வழங்கி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் ஒருபக்கமும், முன்னாள் முதல்வர் இபிஎஸ் ஒருபக்கமும் மக்களைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டார்கள். விஜய் எப்போது கிளம்பப் போகிறார்?
விஜய்யின் சுற்றுப்பயணத்தை தென் மாவட்டங்களில் தொடங்கலாமா வட மாவட்டங்களில் தொடங்கலாமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதேபோல், அடுத்தடுத்த பூத் கமிட்டி மாநாடுகளுக்கான பணிகளும் நிறைவடைந்து தயாராக உள்ளது. ஆனால், தவெக-வுக்கு மாநாடு நடத்துவதற்கு, போராட்டம் நடத்துவதற்கு என எதற்கும் இடம் கிடைப்பதில்லை. இடம் கொடுக்கக்கூடாது என போலீஸாருக்கு திமுக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. மேலும், விஜய்யின் பயணங்களின் போதும் சரியான பாதுகாப்பை போலீஸார் கொடுப்பதில்லை. அதனால், இடம், பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தான் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளையும் நாங்கள் பொறுமையாக திட்டமிட்டு வருகிறோம்.