கனிமவளங்கள் மீது தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிப்பதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் புரவிபாளையத்தில் கே.டி.செந்தாமரை என்பவர் நடத்தி வரும் குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாகக்கூறி ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்ய குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் கடந்த 2021 -ம் ஆண்டு மார்ச் மாதம் ஆய்வு செய்து தாக்கல் செய்த அறிக்கையில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து அந்த பொதுநல வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், இந்த அறிக்கையை ஆய்வுசெய்த கோவை சார்ஆட்சியர் அந்த குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு உத்தரவி்ட்டார். இதை எதிர்த்து செந்தாமரை புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த சுரங்கத்துறை ஆணையர், ரூ.32.29 கோடி அபராத தொகையை ரூ.2.48 கோடியாக குறைத்தும், அதில் ரூ. 25 லட்சத்தை உடனடியாக செலுத்தவும் மீதமுள்ள தொகையை மாதம் ரூ. 8 லட்சம் வீதம் தவணை முறையில் செலுத்தவும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடர்ந்தார். இதற்கிடையே இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த இயற்கை வளங்கள் துறையின் கூடுதல் தலைமை செயலாளர், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்து, ரூ.32.29 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்ற கோவை சார் ஆட்சியரின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதி்ர்த்து செந்தாமரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு:
மனுதாரர் நடத்தி வரும் குவாரிகளி்ல் இருந்து கற்கள், கிராவல் மண் அளவுக்கு அதிகமாக எடுத்த குற்றத்துக்காக கீழமை நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிரான அறிக்கையை அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ள கனிம வளங்களுக்கு இணையான தொகையை அபராதத்தை 100 சதவீதம் முழுமையாக செந்தாமரையிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்கிற சட்டமே, பேராசை பிடித்த நபர்களிடமிருந்து பூமித்தாயை காப்பாற்றும் நோக்கில்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால் கனிமவளங்கள் மீது தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர். சுற்றுச்சூழலையும், கனிம வளங்களையும் முன்வரிசையில் நின்று பாதுகாக்க வேண்டிய புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர், அதுபோன்ற பேராசைக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குவாரிகளை மூடிவிட்டதாக உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துவிட்டு, மறுபுறம் பின்வாசல் வழியாக குவாரிகளை செயல்பட அனுமதித்து உயர் நீதிமன்றத்தையும் ஏமாற்றியுள்ளார்.
இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளரின் நடவடிக்கையை இந்த நீதிமன்றம் மனதார பாராட்டுகிறது. இந்த குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் வரை உள்ள அதிகாரிகளின் பங்கு என்ன என்பதை லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் விசாரித்து குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.