சென்னை: குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில், ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் (இலக்கியா) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தவறான மருத்துவச் சிகிச்சையால் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் கவனக் குறைவால் ஒரு உயிர் போனது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் அரசு மருத்துவமனையில் மாரிமுத்து என்பவருக்கு வலது கால் முட்டியில் அறுவை சிகிச்சை செய்வதற்குப் பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இந்த அளவிற்கு அரசு மருத்துவமனைகளில் கவனக் குறைவாகச் செயல்படுவதால் உயிரிழப்புகளும், உறுப்பு இழப்புகளும் நடக்கின்ற ஒரு அவலம் தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருக்கின்றது.
எனவே மருத்துவத்துறை அமைச்சரும் தமிழக அரசும் இதில் கவனம் செலுத்தி மக்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். தவறான சிகிச்சையால் நடக்கும் அவலங்கள் நடக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். மூட்டு அறுவை சிகிச்சை செய்த நபருக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து உரிய நிவாரணம் வழங்கி அவர் வெகு விரைவில் நடப்பதற்கு இந்த அரசு முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
அந்த உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டும். உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் (இலக்கியா) ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொய்கிறோம்.’ இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.