சென்னை: தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்ட செய்தி: உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகிறது.
நம் சமுதாயத்தின் எதிர்கால முன்னேற்றம், இன்றைய குழந்தைகளை சார்ந்துள்ளது. அவர்கள் தான் நாளைய நாட்டை வழிநடத்தும் செல்வங்கள். துள்ளித் திரிந்து விளையாடி, பள்ளிக்கு சென்று கல்வி கற்க வேண்டிய இனிய பருவத்தில் அவர்களை குழந்தை தொழிலாளராக பயன்படுத்துவது சட்டத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் முற்றிலும் புறம்பானது. குழந்தைகளின் அறிவை வளர்த்து அவர்களின் திறமைகளை மேம்படுத்தி, நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
ஆனால், ஒரு சில குழந்தைகள் பள்ளிக்குப் போகாமல், தொழிலாளர்களாக மாறும்போது, அவர்கள் கல்வி, விளையாட்டு, சுதந்திரம் மற்றும் அவற்றால் கிடைக்கக்கூடிய நல்ல எதிர்காலம் ஆகியவற்றை இழக்கின்றனர். ஒரு எதிர்கால சாதனையாளரை இழப்பது என்பது மிகுந்த வருத்தத்துக்குரியது. எனவே, அத்தகைய சூழலை தடுப்பது மிக அவசியம். கல்வி கற்கும் உரிமையை அனைத்து குழந்தைகளும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைத் தொழிலாளர் முறையை முழுமையாக ஒழிக்கவும், அனைத்து குழந்தைகளின் கல்வி கற்றலை உறுதி செய்யும் பொருட்டும் குழந்தைத் தொழிலாளர் முறையை அகற்றுவதற்காக அரசு மாநில செயல் திட்டத்தையும், நிலையான இயக்க நடைமுறைகளையும் உருவாக்கியுள்ளது. குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம், தமிழகத்தில் மிகக் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகள் தரமான கல்வி கற்கவும், பெற்றோரின் சுமைகளை குறைக்கவும், தமிழக அரசு கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலைச் சிற்றுண்டி மற்றும் சத்தான மதிய உணவு, காலணிகள், பேருந்து பயண அட்டைகள், மிதிவண்டிகள் போன்ற பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் சீரிய முயற்சிகளுக்கு பொது மக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்கி, குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்ற விழிப்புணர்வுடன், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.