கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசு சுகாதாரத் துறையில் செய்த சாதனைகள், பெற்ற விருதுகள் மூலம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண்டுகளில் திமுக அரசின் சுகாதாரத் துறை மாபெரும் சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்தி வெற்றிகளையும், விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.
மருத்துவமனைகள் முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை கொளத்தூர் பெரியார் நாகரில் அரசு பெரியார் மருத்துவமனை, கிண்டியில், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றை திறந்து வைத்தார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.34.6 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு மையம் ரூ.120 கோடியில் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியின் 2,382 மாணவ மாணவியர் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க ரூ.264.72 கோடி சுழல் நிதி உருவாக்கப்பட்டு கட்டணங்களை அரசே ஏற்றுள்ளது. கிண்டியில், ரூ.151 கோடியில் இந்தியாவின் இரண்டாவது தேசிய முதியோர் நல மையம் திறக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 2 கோடியே 34 லட்சத்து 88,431 பயனாளிகள் முதன்முறை சேவைகளையும் 4 கோடியே 52 லட்சத்து 62,337 பயனாளிகள் தொடர் சேவைகளையும் பெற்றுள்ளனர். பள்ளிச்சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், தாய் சேய் நல பரிசு பெட்டகத் திட்டத்தால் ஏராளமானோர் பயனடைந்துள்ளனர்.
புதியதாகத் தோற்றுவிக்கப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மூலம் புறநோயாளிகளுக்கு 18 கோடியே 20 லட்சத்து 83,047 முறை சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.3,755.53 கோடியில் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் உலக வங்கியுடன் இணைந்து ரூ.3,248.67 கோடியில் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 81 லட்சத்து 33,806 பயனாளிகள் ரூ.5,878.85 கோடி பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் 7 லட்சத்து 40,548 பயனாளிகளுக்கு ரூ.348.84 கோடி செலவில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை, அரசு மருத்துவமனைகளில் 3 லட்சத்து 55,741 பயனாளிகளுக்கு ரூ.299.28 கோடி செலவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன. 108 ஊர்தி சேவைத் திட்டத்தில் 79.85 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
உறுப்பு மாற்று ஆணையம்: தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் மூலம், தேசிய அளவில், தொடர்ந்து 6 ஆண்டுகளாக உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் மற்றும் 2023-ல் 8-வது முறையாகவும் தேசிய விருதை தமிழகம் பெற்றுள்ளது. 16,253 ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட்டுள்ளன. குழந்தை இறப்பு விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 28 ஆக இருந்த தேசிய சராசரியிலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 7,433 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கிராமப் புறங்களில் பொது மருத்துவம் சிறப்பு சேவைக்கான விருது, காசநோய் இல்லாத நிலைக்கான விருது, கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் சிறப்பு விருது, மலேரியா தடுப்பு சிறந்த நடவடிக்கைக்கான தேசிய விருது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறந்த செயல்பாடுகளுக்கான விருது என 525 விருதுகளை பெற்றுள்ளதன் மூலம் இந்தியாவின் மிக சிறந்த மாநிலமாக தமிழகம் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.