நாகர்கோவில்: குளச்சல அருகே வாணியக்குடியில் கன்டெய்னர் கரை ஒதுங்கியது. அதிலிருந்து எண்ணெய் படலம் பரவுகிறதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சி கடல் பகுதியில் லைபீரியா நாட்டு சரக்கு கப்பல் சமீபத்தில் மூழ்கியது. அதில் இருந்த 640 கன்டெய்னர்கள் கடலிலே மூழ்கின. அவை கேரளா கடலோரப் பகுதி உட்பட ஆங்காங்கே கடற்கரைகளில் கரை ஒதுங்கி வருகின்றன. தற்போது கன்டெய்னர்களில் ஒன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியகுடி கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கிறது. இது மீனவர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்திருக்கிறது.
சில கன்டெய்னர்கள் சேதமடைந்த நிலையிலே அதில் இருந்து பல ரசாயன மற்றும் எண்ணெய் பொருட்களும் கடலில் சிதறியுள்ளன. அவையும் கன்னியாகுமரி மாவட்டத்தில அனைத்து கடற்கரைகளிலும் கரை ஒதுங்கி கொண்டிருக்கின்றன. இதனால் மீனவர்கள் பாதிப்புக்குள்ளான கடல் பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது கொச்சியில் கடலில் மூழ்கிய கன்டெய்னர்கள் பல குமரி மாவட்ட கடல் பகுதியில் நகர்ந்து வந்திருக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இந்த கன்டெய்னர்கள் கடலுக்குள் இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கின்ற பொழுது அவர்களது மீன்பிடி வலைகள், தூண்டில்கள் படகுகள் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. மேலும், இரவு நேரத்திலே கடலிலே மிதந்து வரக்கூடிய இந்த கன்டெய்னர்களிலே மீனவர்கள் படகு மோதி சேதம் அடையவும், மூழ்கவும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே, கடலிலே மூழ்கியுள்ள அனைத்து கண்டெய்னர்களையும் கண்டுபிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரை ஒதுங்கிய கன்டெய்னரில் இருந்து வெளியான ரசாயன பொருட்களை தூய்மைப் பணியாளர்கள் அகற்றி வருகின்றனர். மேலும், குமரி கடல் பகுதிகளில் எண்ணெய் படலம் பரவுகிறதா எனவும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.