தூத்துக்குடி: குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
இஸ்ரோ சார்பில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது. இங்கு 2,292 ஏக்கர் பரப்பில் ரூ.986 கோடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி கடந்த 2024 பிப். 28-ல் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, குலசேகரன்பட்டினத்தில் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் ரூ.100 கோடியில் ராக்கெட் லாஞ்ச் பேட் எனப்படும் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமை வகித்தார். ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை தொடங்கிவைத்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஆண்டுக்கு 25-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது.
அங்கிருந்து நமது செயற்கைக்கோள்கள் மற்றும் பல்வேறு உலகநாடுகளின் செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டு வருகின்றன. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகளின் உதவியோடு பல செயற்கைக்கோள்கள் இங்கிருந்து விண்ணில் ஏவப்படுகின்றன. தற்போது, நாட்டின் 2-வது ஏவுதளத்தை அமைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டிருக்கிறது. அதற்காக, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து, கடந்த ஆண்டு பிப்ரவரிமாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
கடந்த 6 மாதங்களாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க உள்ள இடத்தில் உட்கட்டமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தற்போது நடைபெற்றுள்ளது. தற்போது ரூ.100 கோடியில் முக்கியமாக 33 கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் குலசேகரன்பட்டினத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும்.
இதற்கான இடம் வழங்கிய தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி. அடுத்த 3 மாத காலத்துக்குள் சிறிய ரக ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இங்கிருந்து 500 கிலோ எடை கொண்ட ராக்கெட் விண்ணில் ஏவப்படும். தனியார் ராக்கெட்டுகளும் இங்கிருந்து ஏவப்படும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும். குலசேகரன்பட்டினம் இந்திய வரைபடத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கிருந்து ஆண்டுக்கு 25 ராக்கெட்கள் வரை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் விண்வெளி மைய இயக்குநர்கள் ராஜராஜன், பத்மகுமார், மகேந்திரகிரி இஸ்ரோ உந்துவிசை வளாக இயக்குநர் ஆசீர் பாக்கியராஜ், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்ட இயக்குநர் சரவண பெருமாள்,எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.