சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலைவாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வாழ்நாள் முழுவதும் இந்த விசாரணை முடிவுக்கு வராது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலைக்கு பணம் பெற்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கர நராயணன் வாதத்தில் கூறியதாவது: இந்த லஞ்ச ஊழல் வழக்கில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வழக்கை முறையாக தமிழக காவல்துறை நடத்தவில்லை. வழக்கில் முன்னாள் அமைச்சர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் அவர்கள் வழக்கை முறையாக நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் இந்த விசாரணை தற்போது முடியாது, எனவே பிரதானமாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களை விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு வாதிட்டார்.
தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது: ஒவ்வொரு வழக்கிலும் 900, 1000 என குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்தால் விசாரணை எப்போது முடிவடையும், இப்படியே போனால் எத்தனை ஆண்டுகளானாலும் இந்த வழக்கு முடியப்போவதில்லை. மேலும், லஞ்சம் கொடுத்தவர்கள் என்று அழைக்கப்படும் ஏழைகளையும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2,000 அல்லது 2,500 பேரையும் விசாரணை செய்தால், முன்னாள் அமைச்சர் மீதான இந்த விசாரணை வாழ்நாள் முழுவதும் முடிவுக்கு வராது.
அதேபோல, குற்றம்சாட்டப்பட்டவர்களை மட்டும் சிக்கவைப்பதே எதிர்தரப்பு முயற்சியாக உள்ளது. இது சிஸ்டம் மீதான ஒரு மோசடி. அமைச்சரைத் தவிர, கூறப்படும் இடைத்தரகர்கள், தரகர்கள் யார், அமைச்சரின் பரிந்துரையின்பேரில் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள்யார், வேலைக்கு எடுக்கும் தேர்வுக்குழு உறுப்பினர்கள் யார், பணம் பெற்றுக்கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார்என்பன போன்ற விவரங்களை அறிய விரும்புகிறோம்.
அது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டனர். அப்போது தமிழக அரசுசார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அமிதா ஆனந்த் திவாரி ஆகியோர், “இந்த ஒட்டு மொத்த வழக்கு தொடர்பாகவும், இணைக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும், சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என்ற மொத்த விவரம் அடங்கிய ஒரு சிறு குறிப்பை தாக்கல் செய்ய உள்ளோம்” என்றனர். இதையடுத்து வழக்கு இன்று தள்ளிவைக்கப்பட்டது.