விழுப்புரம்: கட்சி விரோத செயல் உள்ளிட்ட 16 வகையான குற்றச்சாட்டுகளுக்கு வரும் 31-ம் தேதிக்குள் விளக்க அளிக்க வேண்டும் என்று அன்புமணிக்கு ராமதாஸ் தரப்பு இன்று ஒழுங்கு நடவடிக்கைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பியது.
பாமகவில் உட்கட்சி மோதல் தொடர்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் தனித்தனியே ‘பொதுக்குழு’ கூட்டத்தை நடத்தி உள்ளனர். சென்னையில் அன்புமணியால் கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி ராமதாஸால் நடத்தப்பட்ட மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், பாமக தலைவராக நிறுவனரான ராமதாஸ் செயல்படுவார் என தீர்மானம் நிறைவேறியது. பின்னர், அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்ப ராமதாஸிடம் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மூன்று பக்க அறிக்கையை வழங்கினார்.
அதில், “புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து மைக்-ஐ தூக்கி வீசியது, பனையூரில் கட்சி அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறி கட்சியை பிளவுப்படுத்தியது, சமூக வலைதளத்தில் ஒரு சிலர் மூலம் ராமதாஸுக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு அவமானம் செய்வது, ஆளுமை மிக்கவர்களின் பேச்சுவார்த்தை ஏற்காமல் உதாசீனப்படுத்தியது, தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவியை வைத்தது, ராமதாஸ் அனுமதியின்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது மற்றும் உரிமை மீட்பு பயணத்தை நடத்துவது, பாமக ஆதரவு தொலைக்காட்சியில் ராமதாஸை இருட்டிப்பு செய்வது, ராமதாஸிடம் பேசாமல் 40 முறை பேசியதாக பொதுவெளியில் பொய் பேசியது” உள்பட அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று(ஆக.19) நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், அறிக்கை ஒன்றை வாசித்தார். அதன் விவரம்:
‘புதுச்சேரி அடுத்த பட்டானூரில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து, கட்சி தலைமைக்கு வரபெற்ற 16 குற்றச்சாட்டுகளை பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்டு, கட்சியின் அமைப்பு விதி எண்-23-ன் படி, ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது.
அதன்படி, ஒழுங்கு நடவடிக்கைக் குழு இன்று கூடி, விவாதித்து ஆலோசனை நடத்தியது. பின்னர், 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு, அன்புமணி ராமதாஸுக்கு அறிக்கை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அமைப்பு செயலாளர் மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் தொடர்பான விளக்கம் மற்றும் ஆவணங்களை வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றார்.
பாலுவின் தவறான தகவல்: இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அருள் எம்எல்ஏ, “பாமக விதி எண் 13-ன் படி, பாமகவுக்கு நிரந்தரமானவர் நிறுவனர் ராமதாஸ். அவர், கூட்டும் நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்கள்தான் செல்லும் என 1989-ல் உருவாக்கப்பட்ட பாமக சட்ட விதிகள் கூறுகிறது.
அப்படியிருக்கும்போது, கட்சியின் சட்ட விதிகளை தவறாக கூறி வரும் வழக்கறிஞர் பாலு, உண்மையான வழக்கறிஞரா, போலி வழக்கறிஞரா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அன்புமணி விளக்கம் அளிக்க தவறினால், 9 பேர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ராமதாஸுக்கு சிலவற்றை பரிந்துரை செய்யும். அதன் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது அவர்தான் முடிவு செய்வார்.
சட்டப் புலி என நினைத்துக் கொண்டு செயல் தலைவர் அன்புமணிக்கு தவறான தகவல்களை வழக்கறிஞர் பாலு கொடுத்து வருகிறார். உண்மை தெரிந்தால், செயல் தலைவர் ஏற்றுக் கொள்வார், ராமதாஸை வந்து சந்தித்துவிடுவார்” என்று அருள் எம்எல்ஏ கூறினார்.