திண்டுக்கல்: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வார விடுமுறை தினத்தில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை காலம் மட்டுமின்றி வார விடுமுறை தினங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவது தான் காரணம். இந்நிலையில் வார விடுமுறை தினங்களாக சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இ-பாஸ் முறையால் சிரமம் என்ற நிலை மாறி, தற்போது எளிதாக இ பாஸ் எடுத்து சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். கடந்த இரு தினங்களாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களான குணா குகை, பைன் பாரஸ்ட், தூண் பாறை, மோயர் பாய்ண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, ரோஸ் கார்டன், பிரையண்ட் பூங்கா பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனர்.
தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா என வெளி மாநில சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தந்திருந்தனர். இதனால் சுற்றுலாத் தலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் ஓட்டியும், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

நேற்று கொடைக்கானலில் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவியது. குறைந்த பட்சமாக 19 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவியது. அவ்வப்போது மேகமூட்டம் காணப்பட்டது. இரவு நேரத்தில் காற்றில் ஈரப்பதம் 90 சதவீதம் இருந்ததால் இதமான குளிர் காணப்பட்டது.
இதனால் பகலில் மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான குளிர்ந்த காலநிலை கொடைக்கானலில் நிலவியதை இயற்கை எழிலுடன் சேர்ந்து சுற்றுலாப் பயணிகள் உணர்ந்தனர்.