சென்னை: பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பித்தல், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கு ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் (இந்தியா) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் என்ற சிறப்பு நிறுவனத்தை உருவாக்கின. இந்நிறுவனம் சார்பில், பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பிப்பதற்கும், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் (Multimodal Facility Complex – MMFC) அமைப்பதற்குமான முக்கிய ஒப்பந்தம் ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.சித்திக் முன்னிலையில், சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் நிறுவனத்தின் பொறியியல் குழு பொது மேலாளர் சஞ்சய் பட்டாச்சார்யா ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டத்தின் மூலம், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வர்த்தக வளாகங்களுடன் இணைந்து அமையவுள்ளது. இந்த பேருந்து முனையம் (அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளம்) 24 மாதங்களுக்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் மற்றும் குறளகம் கட்டிடம் 30 மாதங்களுக்குள்
நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர். இந்த வளாகம், நகரத்தின் பல பகுதிகளிலிருந்து எளிதாக அணுகக்கூடிய வகையில் அமைக்கப்படும். பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாக கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் பேருந்து நிறுத்தங்கள் இடம்பெறும். மொத்தம் 73 பேருந்து நிறுத்தங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. கட்டிடத்தில் 2-வது முதல் 8-வது தளம் வரை அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.