மதுரை: தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மேலூர் எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் 2020-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் 2019-ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வை மாநிலம் முழுவதும் 5,574 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றனர். இது குறித்து விசாரித்தபோது தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அளித்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்தனர். முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக 99 பேர் வாழ்நாள் தகுதியிழப்பு செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கீழ்நிலை அதிகாரிகள், விண்ணப்பதாரர்கள், புரோக்கர்கள், பார்சல் சர்வீஸ் ஓட்டுனர்கள், காவலர்கள் மட்டுமே. உயர் அதிகாரிகள் யாரும் வழக்கில் சேர்க்கப்படவில்லை.
உயர் அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் இந்த மோசடி நடைபெற்றிருக்காது. இதேபோல் டிஎன்பிஎஸ்சி 2016-ல் நடத்திய குரூப் 1 தேர்விலும் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்ற பலர் காவல் துறை மற்றும் நிர்வாகத் துறையில் உயர் பொறுப்புகளில் உள்ளனர். தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு டிஎன்பிஎஸ்சியை நம்பியுள்ளனர். அரசு வேலைக்கு செல்ல கடுமையாக படித்து வருகின்றனர். அப்படியிருக்கும்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெறுவது அரசு வேலைக்காக கடுமையாக முயன்று வரும் இளைஞர்களுக்கு இழப்பை ஏற்படுத்தும்.
இதனால் எதிர்காலத்தில் முறைகேடு நடைபெறாமல் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. இதனால் சிபிசிஐடி விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே டிஎன்பிஎஸ்சி முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றியும், எதிர்காலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க மாநிலம் முழுவதும் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி பயிற்சி மையங்களை கண்காணிக்க குழு அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. டிஎன்பிஎஸ்சி வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரரின் கோரிக்கை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் 14.12.2021-ல் பிறப்பித்த உத்தரவுபடி டிஎன்பிஎஸ் தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்கவேண்டிய தேவையில்லை. மனு முடிக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.