கும்பகோணம்: கும்பகோணம் ஆரோக்கியசாமி நகரைச் சேர்ந்தவர் அகமது பாட்சா. இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இதில், 2-வது மகள் அஸ்லான பேகம்(7) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அஸ்லான பேகம் அண்மையில் தெருவில் நின்றுகொண்டிருந்தபோது, அவரை 6-க்கும் மேற்பட்ட நாய்கள் சூழ்ந்து, கடிக்க முயன்றன. அப்போது, சிறுமி சுதாரித்து அருகில் இருந்த வீட்டுக்குள் நுழைந்து தப்பினார். இதில், அந்தச் சிறுமியின் உடை கிழிந்தநிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இப்பகுதியில் அண்மைக்காலமாக சுற்றித்திரியும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள், பள்ளிக்கு சென்றுவரும் மற்றும் தெருவில் நிற்கும் குழந்தைகளை குரைத்தவாறு விரட்டிச் சென்று கடிக்க முயற்சி செய்வதால், குழந்தைகளை வெளியில் அனுப்பவே பெற்றோர் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், இதுதொடர்பாக கும்பகோணம் மாநகராட்சி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர்.

