Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, August 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“கும்பகோணம் கலைஞர் பல்கலை.க்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை” – முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு
    மாநிலம்

    “கும்பகோணம் கலைஞர் பல்கலை.க்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை” – முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

    adminBy adminJune 16, 2025No Comments8 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “கும்பகோணம் கலைஞர் பல்கலை.க்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை” – முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    தஞ்சாவூர்: “கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் அமையவிருக்கும் பல்கலைகழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 16) தஞ்சாவூரில் நடைபெற்ற அரசு விழாவில்,முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி ஆற்றிய உரையில், “மாமன்னர் இராசராசன் ஆட்சி செய்த இந்த சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. மாடு கட்டி போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டி போர் அடித்த, நெற்களஞ்சியமான தஞ்சை மண்ணிற்கு வந்திருக்கிறேன். இங்கு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னால் மேட்டூர் அணையை குறித்த தேதியில் திறந்து வைத்துவிட்டு, நேற்று மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணையையும் திறந்திருக்கிறேன்!

    இப்படி, மேட்டூர் அணையையும், கல்லணையையும் குறித்த நேரத்தில் நேரில் வந்து திறந்து வைக்கும் முதலமைச்சர் நான் தான் என்று, முதல் முதலமைச்சராக பெருமைப்படுகிறேன். இதை இங்கு இருக்கக்கூடிய உழவர் பெருமக்களெல்லாம் மகிழ்ச்சியோடு சொன்னார்கள்… அவர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க, முக்கியமான அறிவிப்பை இங்கு வெளியிட விரும்புகிறேன்.

    2021-22-ஆம் ஆண்டுமுதல் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம், 276 கோடியே 84 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோலவே இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களுக்காக குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்திற்கு 82 கோடியே 77 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அதுமட்டுமல்ல – தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக, டெல்டா அல்லாத மற்ற மாவட்டங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயன் பெறும் வகையில் 132 கோடியே 17 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கார் – குறுவை – சொர்ணவாரி பருவத்திற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டத்தையும் உழவர் பெருமக்களின் நலனுக்காக துவங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தின்கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், சுமார் 56 ஆயிரம் விவசாயிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதுபோல் தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் இருக்கும் சுமார் 8 இலட்சம் விவசாயிகளுக்கும் இந்த சிறப்புத் தொகுப்புத் திட்டம் வழங்கப்படும்.

    இந்த நிகழ்ச்சியில், 325 கோடியே 96 இலட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரத்து 461 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 309 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நாலாயிரத்து 127 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். அதுமட்டுமல்ல. இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 383 பேருக்கு 558 கோடியே 43 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இந்த விழாவில் வழங்கயிருக்கிறேன்

    2021-இல் நான் முதலமைச்சரான பிறகு, டிசம்பர் மாதம் தஞ்சை பகுதிக்கு நான் வந்தபோது சரஸ்வதி மகாலை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். அதன்பிறகு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சரஸ்வதி மகால் நூலகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் ஊதியத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் 75 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்க ஆரம்பித்தோம்.

    இந்த நிலையில்தான், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களிடம், சரஸ்வதி மகாலுக்கான தேவைகள் என்ன இருக்கிறது என்று பார்க்க சொல்லி சொல்லியிருந்தேன்…அவரும் பார்த்துவிட்டு, சில பரிந்துரைகளை என்னிடத்திலே கொடுத்தார்… நேற்று, மாவட்ட ஆட்சியரிடமும் என்னென்ன தேவைகள் இருக்கிறது என்று கேட்டேன். அவரும் சில கருத்துகளை எடுத்துச் சொன்னார்… அதன் அடிப்படையில் ஒரு அறிவிப்பு வெளியிட விரும்புகிறேன். இனிவரும் காலங்களில் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் சேர்த்து, ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் நூலகக் கட்டட பராமரிப்பு செலவுகளை மேற்கொள்ள கூடுதல் மானியத்தை தமிழ்நாடு அரசு வழங்கும்.

    இந்த நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய ஓலைச் சுவடிகளை பாதுகாக்கத் தேவையான பணியாளர்களை வெளிமுகமை வாயிலாக நியமிக்கவும், அந்த ஓலைச்சுவடிகள் குறித்து இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும், இந்த நூலகத்துடன் பழுதடைந்த கட்டடங்களை பழமை மாறாமல் பாதுகாக்கும் வகையில், பொதுப்பணித் துறையின் மரபுசார் கட்டடப் பிரிவின் வாயிலாக 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்படும். இந்தக் கூடுதல் மானியம் மற்றும் சீரமைப்புப் பணிகள், சரஸ்வதி மகால் நூலகத்தில் இருக்கும் அரிய சேமிப்புகளான கையெழுத்துப் பிரதிகள், ஓலைச் சுவடிகள் மற்றும் நூல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும்!

    இந்த அறிவிப்போடு இன்னும் மூன்று அறிவிப்புகளையும் வெளியிட விரும்புகிறேன்…

    முதல் அறிவிப்பு – தென்பெரம்பூர் அருகில் வெண்ணாறு மற்றும் வெட்டாறு பிரியும் இடத்தில், 42 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் அமைக்கப்படும்.

    இரண்டாவது அறிவிப்பு – ஈச்சங்கோட்டை முதல் வெட்டிக்காடு வரை, கல்லணை கால்வாய் சாலை 40 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்!

    பூதலூர் வட்டத்தில் இருக்கும் உயர் கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் மற்றும் மதகுகளில் 15 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

    நம்முடைய திராவிட மாடல் அரசில், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பலனளிக்கும் வகையில் ஏராளமான முத்திரை திட்டங்களை நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்… இதை பொத்தாம் பொதுவாக நாம் சொல்லவில்லை. இந்த தஞ்சை மாவட்டத்தில் மட்டும், நம்முடைய முத்திரை திட்டங்களால் எத்தனை பேர் பயனடைந்திருக்கிறார்கள் என்பதை புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டும் என்றால்,

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 4 இலட்சத்து 17 ஆயிரம் மகளிருக்கு, மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். புதுமைப்பெண் திட்டத்தில் 34 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 13 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 62 ஆயிரம் மாணவச் செல்வங்களை காலையில் பள்ளிகளில் சூடாகவும் – சுவையாகவும் சாப்பிட வைத்து மனநிறைவு அடைகிறோம்.

    உழவர் பெருமக்களுக்காக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் இரண்டு இலட்சத்து 56 ஆயிரம் விவசாயிகள் பயனடைகிறார்கள். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில், இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் பயனடைகிறார்கள். ஏழாயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்திருக்கிறோம். முதல்வரின் முகவரி திட்டத்தில் 71 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கண்டிருக்கிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 40,470 பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 14 இலட்சத்து 45 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

    இப்படி ஒவ்வொருவரின் தேவைகளை கேட்டு, கேட்டு அறிந்து அவர்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிவிட்டு இங்கு வந்திருக்கிறேன்! இந்த சாதனைகளை உங்களின் முகங்களில் காணக்கூடிய மகிழ்ச்சியின் மூலமாக நான் பார்க்கிறேன்! மக்களான நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று நேற்று நீங்கள் கொடுத்த வரவேற்பே இன்றைக்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது!

    இதையெல்லாம் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி புலம்பிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய உட்கட்சி பிரச்சினையையும், கூட்டணி பிரச்சினையையும் மறைப்பதற்காக இன்றைக்கு அறிக்கை அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்! அந்த அறிக்கைகளையாவது ஒழுங்காக – செய்திகளை படித்து – உண்மை நிலவரங்களை தெரிந்து வெளியிடுகிறாரா… என்றால், அதுவும் இல்லை!

    ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்று, நான் உங்களையெல்லாம் சந்தித்தபோது பெட்டியில் வாங்கிய மனுக்கள் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார். அரசு சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கிறோம். அது உடனே தொலைக்காட்சி செய்திகளில் வருகிறது… சமூக வலைதளங்களில் வருகிறது… மறுநாள் எல்லா செய்தித்தாள்களிலும் வருகிறது… அப்போதும் செய்திகளை பார்க்க மாட்டேன் – படிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து, இப்படி அரைவேக்காட்டுத்தனமான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார் நம்முடைய எடப்பாடி பழனிசாமி.

    அவருக்காக இல்லை என்றாலும், மக்களான உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை… ஏன் என்றால், நான் பணியாற்றுவது உங்களுக்காகத்தான்! அதனால்தான், சுருக்கமாக சொல்கிறேன்… “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” முன்னெடுப்பில் பெறப்பட்ட 4 இலட்சத்து 57 ஆயிரத்து 645 மனுக்களுக்கு தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்ற தனித்துறையை உருவாக்கி நூறு நாட்களில் தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

    நூறாவது நாளில் கோட்டையில் நடந்த நிகழ்ச்சியில், 32 ஆயிரம் பேருக்கு பட்டா – 30 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் – 10 ஆயிரம் பேருக்கு தொகுப்பு வீடுகள் வழங்கியதோடு, அந்த மனுக்களை மையமாக வைத்து, 544 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஆயிரம் வளர்ச்சிப் பணிகளை திட்டமிட்டோம்! இதனால், மக்கள் நம்பிக்கையோடு மனுக்களை கொடுக்க தொடங்கினார்கள்! அந்த மனுக்களை முழுமையாக, முறையாக பரிசீலிக்க “முதல்வரின் முகவரி” தனித்துறையை உருவாக்கி, எல்லா மனுக்களுக்கும் முப்பது நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்று உத்தரவிட்டேன்.

    அடுத்து, “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின்கீழ் அவர்கள் பகுதிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்தினோம். 2024-ஆம் ஆண்டு சென்னை, கோட்டூர்புரத்தில் முதலமைச்சரின் உதவி மையம் தொடங்கினோம்! இதில் இருநூறு பேர் வேலை பார்க்கிறார்கள். ஒவ்வொரு மனு மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதை அவர்கள் கண்காணிக்கிறார்கள். இது எல்லாவற்றையும் செய்திகள் மூலமாக ஆவணப்படுத்தி, மக்களான உங்களிடம் சேர்த்து, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறோம்!

    ஆனாலும், இதெல்லாம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியவில்லை… இதில், அந்த பெட்டிகளின் சாவி தொலைந்துவிட்டதா? என்று கேட்கிறார்… சரி, அவர் நினைப்பு எல்லாம் பெட்டியில்தான் இருக்கிறது… செய்தித்தாளையே படிக்காத எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் ஒன்றை சொல்கிறேன்.

    கடந்த 13-ஆம் தேதி ஒரு பத்திரிகையில் வந்த ஒரு செய்தியை எடுத்துக்காட்டுக்குச் சொல்கிறேன்… அதன் தலைப்பு என்ன தெரியுமா?. ‘முதல்வரிடம் மனு அளித்த 30 நிமிடத்தில் ஆக்‌ஷன்’! இதுதான் அந்த தலைப்பு! அந்தச் செய்தியை சுருக்கமாக சொல்கிறேன்… கடந்த 11-ஆம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்க நான் சேலம் சென்றிருந்தபோது யாழ்மொழி என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவியும் – அநிருத்தன் என்ற ஆறாம் வகுப்பு மாணவனும் என்னை சந்தித்து, தாங்கள் படித்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை கேட்டு மனு கொடுத்தார்கள்.

    அதற்கு பிறகு நடந்ததை பற்றி அந்த பத்திரிகையில் என்ன எழுதியிருந்தார்கள் என்றால், “இரவு 8 மணிக்கு – அந்த மாணவர்களைப் பார்த்ததும் வாகனத்தை நிறுத்திய முதல்வர், அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, அவர்களது கன்னத்தை தட்டி வாழ்த்து தெரிவித்துச் சென்றார். இரவு 8.30 மணி முதல் 11.30 மணி வரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், சேலம் பொதுப்பணித் துறை, பி.டி.ஓ.அலுவலகம் ஆகியவற்றில் இருந்து தலைமை ஆசிரியரிடம் பல்வேறு விபரங்கள், ஆவணங்களை பெற்றனர்.

    மறுநாள் காலை 7 மணிக்கு – நங்கவள்ளி ஒன்றியப் பொறியாளர் வள்ளி தலைமையிலான குழுவினர், அந்த பள்ளியில் ஆய்வு செய்து சுற்றுச்சுவர், கழிப்பறை கட்டுவதற்கான மதிப்பீடு தயாரித்தனர். ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக சுற்றுச்சுவர், கழிப்பறைக் கட்டடங்கள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரிடம் மனு கொடுத்த சிறிது நேரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததால், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முதல்வரிடம் மனு கொடுத்த மாணவ, மாணவியரை ஆசிரியர்கள் பாராட்டினர்” என்று அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது.

    இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் செயல்பாட்டுக்கு எடுத்துக்காட்டு! இந்த வேகத்தை இன்னும் அதிகரிக்க – மிக முக்கியமான ஒரு அறிவிப்பை நான் வெளியிட விரும்புகிறேன்…

    மக்களான உங்களின் குறைகளைத் தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடத்தப்படும்.

    நகரப் பகுதிகளில் 3 ஆயிரத்து 768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 6 ஆயிரத்து 232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள்! இந்த “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், திட்டங்கள் உங்களைத் தேடி வரும்! இதுவே, கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகளை நீங்கள் பெறலாம்.

    இதில் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால்… கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களில் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாக தரலாம். இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மேல் 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும்! ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி, அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும்.

    இத்தனை துறைகள், சேவைகள், திட்டங்கள்… இதில் எப்படி விண்ணப்பிப்பது? என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். உள்ளூர் அளவில் இதற்கான தன்னார்வலர்கள் உங்கள் வீடுதேடி வந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் பற்றி உங்களுக்கு விளக்குவார்கள். எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்ன சான்று, ஆவணங்கள் எல்லாம் இணைக்க வேண்டும்? தகுதி வரம்பு என்ன? இப்படி தேவையான எல்லா தகவல்களும், வழிகாட்டுதல்களும் உங்கள் வீட்டிற்கே வந்து கொடுப்பார்கள்.

    இப்படி, நாளும் பொழுதும் அல்லும் பகலும் மக்களின் குறைகளை தீர்க்கும் நம்மைப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவருக்கு வயிறு எரியதானே செய்யும்! இப்படி, இவர் ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் – ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர்… இதுவரை அவர் செய்ததெல்லாம் உங்களுக்கே தெரியும்… சமீபத்திலான ஒரு உதாரணம் சொல்கிறேன்.

    இந்த தஞ்சை மாவட்டத்தில் ஒரு புதிய பல்கலைக்கழகம் அமைக்க அறிவிப்பு செய்தேன்… அதன்பிறகு நானே தயங்கினாலும், அந்த பல்கலைக் கழகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர்தான் வைக்கப்பட வேண்டும் என்று சட்டமன்றத்தில் தி.மு.க. கட்சி மட்டுமல்ல, எல்லா கட்சியும் கட்சி வேறுபாடில்லாமல் எல்லோரும் என்னிடம் வலியுறுத்தினார்கள். அதற்குப் பிறகுதான் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட வரைவை அனைவரின் ஒப்புதலோடு ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம்.

    ஆனால், தஞ்சை மாவட்ட மாணவர்களின் உயர்கல்விக்கான அந்த சட்டத்துக்கு ஆளுநர் இப்போதுவரை ஒப்புதல் தரவில்லை. நாம் அனுப்பி வைத்தவுடன் அவர் ஒப்புதல் தந்திருந்தால், இன்றைக்கு இந்த நிகழ்ச்சியிலேயே கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பேன்.

    கடந்த மே 2 அன்று அனுப்பி வைத்தோம். 40 நாளுக்கு மேல் ஆனது. இன்னும் அனுமதி வரவில்லை! உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகாவது அவர் மாறியிருப்பார் என்று நினைத்தோம்… ஆனால், இன்னும் மாறவில்லை! கலைஞர் பல்கலைக்கழக மசோதா தொடர்பாக பலமுறை நாம் நினைவூட்டினோம். உயர் கல்வித் துறை அமைச்சரையும் “ஆளுநரை சென்று பாருங்கள்” என்று சொல்லியிருந்தேன். ஆனால், உயர் கல்வித் துறை அமைச்சரை சந்திக்க நேரம் தராமல் இழுத்தடிக்கிறார். இன்னும் நேரம் தரவில்லை. தெரியும். நேரம் கொடுத்தால் ஏதேனும் கேட்பார்கள் என்று… அதற்கு பயந்துகொண்டு சந்திக்க மறுக்கிறார்.

    ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கேட்கும் ஒரே கேள்வி என்றவென்றால், ஓர் ஆளுநருக்கு இதைவிட வேறு என்ன முக்கியமான வேலை இருக்க முடியும்? இப்படி ஆளுநர் ஒரு பக்கம் என்றால் – ஒன்றிய அரசு மற்றொருபக்கம் நிதி ஒதுக்காமல் உபத்திரவம் செய்கிறார்கள். அதையெல்லாம் சமாளித்து, நாம் எவ்வளவோ திட்டங்களையும், பல சாதனைகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்.

    என்னுடைய 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் நான் பார்க்காத தடையோ, எதிர்கொள்ளாத நெருக்கடியோ இல்லை! மிசாவையே பார்த்தவன் இந்த ஸ்டாலின்! அரசியலில் எல்லா நெருக்கடிகளையும் – எல்லா எதிரிகளையும் – அவர்களின் சதி திட்டங்களையும் அவர்களோடு எதிர்த்துப் போராடியவன். அதையெல்லாம் முறியடித்துதான் இன்றைக்கு உங்களின் அன்போடு, உங்களுடைய ஆதரவோடு நான் முதலமைச்சராக அமர்ந்திருக்கிறேன். எல்லா வகையான எதிர்ப்புகளையும் தாண்டித்தான் இங்கு உங்கள் முன்னால் நின்றுகொண்டு இருக்கிறேன்.

    எதிர்க்கட்சிகளின் அவதூறாக இருந்தாலும், ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையாக இருந்தாலும், ஆளுநரின் அடாவடியாக இருந்தாலும், அனைத்தையும் தாண்டி நினைத்ததை செய்து முடிக்கும் துணிவும் – கொள்கை உறுதியும் – மக்களான உங்கள் ஆதரவும் எனக்கு இருக்கிறது! அந்த ஆதரவை எப்போதும் நீங்கள் தர வேண்டும் தர வேண்டும்.

    இன்றைக்கு கும்பகோணத்தில் நம்முடைய கருணாநிதி பெயரால் அமையவிருக்கும் பல்கலைக்கழகத்துக்கு இதுவரை ஆளுநர் அனுமதி தரவில்லை. பொறுத்திருப்போம். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தால் அதற்கு பிறகு ஆளுநருக்கு பணியவேண்டிய ஒரு கட்டாயத்தை ஏற்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    கால்நடைகள் மேய்ந்தால்தான் காடுகளில் தீ பரவாது: சீமான்

    August 3, 2025
    மாநிலம்

    விநாயகர் சதுர்த்தி: கோயில் பாதுகாப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்து முன்னணி திட்டம்!

    August 3, 2025
    மாநிலம்

    திருப்பத்தூர் பள்ளி மாணவர் மர்ம மரணம்: உயர்நிலை விசாரணை நடத்த அன்புமணி கோரிக்கை

    August 3, 2025
    மாநிலம்

    மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கிய இளைஞர் – ஸ்கூபா டைவிங் மூலம் உடல் மீட்பு

    August 3, 2025
    மாநிலம்

    ‘தன்மான உணர்வை விதைத்த வீரப்பெருஞ்சுடர்’ – தீரன் சின்னமலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை

    August 3, 2025
    மாநிலம்

    ‘தமிழ் மண்ணில் ஆதிக்கத்தை அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்! ’ – தீரன் சின்னமலைக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

    August 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ‘கூலி’-க்கு முன் ‘ஏ’ சென்சார் சான்றிதழ் பெற்ற ரஜினிகாந்தின் 5 திரைப்படங்கள்!
    • கால்நடைகள் மேய்ந்தால்தான் காடுகளில் தீ பரவாது: சீமான்
    • இயற்கையாகவே நெஞ்செரிச்சலைக் குறைப்பதற்கான 7 வழிகள்: சர்க்கரை மெல்லுதல் – உணவுக்குப் பிறகு இலவச பசை, இடது பக்கத்தில் தூங்குவது, மேலும் | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • குடியரசு துணைத் தலைவர் தேர்தலால் மீண்டும் ஒத்திவைக்கப்படும் பாஜக தேசிய தலைவர் தேர்வு!
    • ஆடி பெருக்கை முன்னிட்டு நீர் நிலைகளில் குவிந்த கடலூர் மாவட்ட மக்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.