நாகர்கோவில்: குமரி கடல் பகுதியில் கரை ஒதுங்கிய கன்டெய்னரில் இருந்து பொருட்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 36 கடற்கரை கிராமங்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி மூழ்கியது. 640 கன்டெய்னர்களில் இருந்தவை, பல கடல் பகுதிகளில் மிதந்தும், கரையொதுங்கியும் வருகிறது. இதில் ஒரு கன்டெய்னர் குமரி மாவட்டம் வாணியக்குடி கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. அந்த கன்டெய்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அதிலிருந்த பொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது.
இது குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “குமரியில் கரை ஒதுங்கிய கன்டெய்னரில் பிளாஸ்டிக் துகள் அடங்கிய மூட்டைகளே அதிகம் உள்ளன. மேலும் கால்சியம் கார்பைடு, மரைன் கேஸ் ஆயில், கந்தக எரிபொருள் எண்ணையுடன் கூடிய பொருட்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது தென்மேற்கு பருவமழையால் காற்று அதிகம் வீசுவதால் கன்டெய்னரில் இருந்து விழும் பொருட்கள் கடற்கரையினை நோக்கிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது.
குமரி கடற்கரையில் கரையொதுங்கிய கண்டெய்னர் தூத்துக்குடி கஸ்டம்ஸ் உதவியுடன் மீட்கப்பட்டது. அதிலிருந்து 25 கிலோ கொள்ளளவு கொண்ட நெகிழி துகள்கள் 460 மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளது. இதை மீட்கும் பணியில் 439 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை மணலுடன் பரவிய பிளாஸ்டிக் பொருட்கள் மீட்கப்பட்டு வருகிறது. 2 வருடம் வரை கடலில் கிடக்கும் கன்டெய்னர்களில் இருந்து பொருட்கள் கரை ஒதுங்க வாய்ப்பிருப்பதால் இதைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறோம்.
மரக்கட்டைகள், முந்திரி பருப்பு போன்றவையும் கன்டெய்னர்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அதேநேரம் காஸ் ஆயில் ஏதும் குமரி கடலில் கலக்கவில்லை. தேங்காய் பட்டணத்தில் இருந்து மணக்குடி வரை 36 கடற்கரை கிராமங்களில் கண்டெய்னரில் இருந்து வெளியான பொருட்கள் கரை ஒதுங்கி வருகிறது. எனவே 36 கடற்கரை கிராமங்களையும் தினமும் ட்ரோன் மூலம் சர்வே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொச்சியில் மூழ்கிய கப்பலிலிருந்த 640 கன்டெய்னர்களில் 250-க்குள் மட்டுமே கடலில் பிற பகுதிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும், மீதமுள்ள 400 வரையிலான கன்டெய்னர்கள் கப்பலின் அடிப்பகுதியில் இருப்பதால் அவை கடலில் மிதக்க வாய்ப்பில்லை எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன” என்றார்.