குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய மழையால் குளிரான தட்பவெப்பம் நிலவியது. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் வெளியேறும் குழாய்களை பராமரிக்காததால் தண்ணீர் ஆறுபோல ஓடியது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய கொட்டிய மழை நேற்று பகலிலும் தொடர்ந்தது. இதனால் குளிரான தட்ப வெப்பம் நிலவியது. அதிகபட்சமாக சிற்றாறு ஒன்றில் 31 மிமீ., மழை பெய்தது. பேச்சிப்பாறையில் 30, பாலமோரில் 22, பெருஞ்சாணி, சுருளோட்டில் தலா 21, மழை அடையாமடையில் 14, இரணியலில் 13 மிமீ., மழை பதிவானது.
மழையால் குமரி மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமான மார்த்தாண்டத்தில் உள்ள மேம்பாலத்தில் தண்ணீர் ஆறு போல் ஓடியது. குழித்துறை சந்திப்பு முதல் மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த பாலத்தில் மழைநீர் வெளியேற குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்களில் மண் அடைத்திருந்ததால் தண்ணீர் வெளியே செல்ல முடியவில்லை.
இதனால் மழைநீர் மார்த்தாண்டம் சந்திப்பு பகுதியில் மேம்பாலத்தின் மேல் பகுதியில் ஆறுபோல் ஓடியது. இதனால் வாகனங்கள் தத்தளித்தவாறு கடக்க நேர்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். நான்குசக்கர வாகனங்கள் மேம்பாலத்தில் தேங்கிய தண்ணீரில் நீந்தி செல்வதை போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மார்த்தாண்டம் பாலத்தின் மழைநீர் வடிகால் பைப் மற்றும் சீரமைப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.