சென்னை: மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி குடியிருப்புப் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காடு கோலடி கிராமத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் எம்.காமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “கோயில், குடியிருப்புகள் மற்றும் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 500 மீட்டருக்கு அப்பாலும், நீர் நிலைகளுக்கு 250 மீட்டர் தொலைவிலும் இருக்கும் வகையில் மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி உள்ளது. அந்த விதிகளைப் பின்பற்றாமல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் புகாரில் சுட்டிக்காட்டியபடி, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறதா என்பது குறித்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ஆய்வை 6 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும். ஆய்வு முடிவுகள் குறித்து மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும். ஆய்வு முடிவில் மனுதாரருக்கு திருப்தி இல்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.