மதுரை: குடியிருப்புப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உடல், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தோண்டி எடுக்கப்பட்டு, பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை காளிகாப்பானைச் சேர்ந்த எம்.சவுந்தரபாண்டி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: காளிகாப்பான் குட்லக் அவென்யூ குடியிருப்பு பகுதியில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 16.12.2024-ல் முதுமையால் உயிரிழந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியமூர்த்தியின் உடல் என் வீடு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு கிராம ஊராட்சி விதிகள்படி, குடியிருப்புப் பகுதியிலிருந்து 90 மீட்டருக்குள் உடல்களை அடக்கம் செய்யக்கூடாது. மேலும், உரிமம் பெறப்படாத இடங்களில் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற முழு அமர்வும், இரு நீதிபதிகள் அமர்வும் 2023-ல் உத்தரவிட்டன. எனவே, குடியிருப்புப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரியின் உடலை அங்கிருந்து அகற்றி, அனுமதிக்கப்பட்ட மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி விவேக்குமார்சிங் விசாரித்தார். வழக்கறிஞர்கள் இ.பினேகாஸ், ந.அர்ஜூன்குமார் வாதிட்டனர். பின்னர் நீதிபதி, “தமிழ்நாடு ஊராட்சி சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படாத இடங்களில் எந்த உடலும் அடக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது உயர் நீதிமன்ற முழு அமர்வு உத்தரவுகளுக்கு எதிரானது.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உடலைக் குடியிருப்புப் பகுதிக்குள் அடக்கம் செய்தது சட்டவிரோதம். எனவே, போலீஸ் பாதுகாப்புடன் உடலைத் தோண்டியெடுத்து, அனுமதிக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்ய மதுரை கிழக்கு வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார். இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பொதுமயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.