சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதா கிருஷ்ணனுக்கு ஆளுநர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தமிழக பாஜக அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. அவருக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக மக்களின் மனமார்ந்த நல்வாழ்த்துகள். அவரது தலைமை தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, ஊக்குவித்து, மகிமைப்படுத்தும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அரசியலமைப்புச் சட்டத்தின் வழிநின்றும், நாட்டின் மக்களாட்சிக் கருத்தியல்களின் வழிநின்றும் அவர் தமது கடமைகளை ஆற்றுவார் என்று நம்புகிறேன். மேலும் இந்திய மக்களாட்சியின் உணர்வை நிலைநாட்டும் வகையில் மிக உறுதியோடு போராடிய சுதர்ஷன் ரெட்டிக்கும் பாராட்டுகள்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: சி.பி.ராதாகிருஷ்ணனின் பொதுவாழ்வுக்கும், அர்ப்பணிப்போடு அவர் ஆற்றிய மக்கள் சேவைக்கும், இப்பதவி மிகச் சிறந்த அங்கீகாரம். குடியரசு துணைத் தலைவர் பொறுப்பில் அவரது பணி சிறக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்: மாநிலங்களவைக்கு தலைமை தாங்கும் இந்தியாவின் 15-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கவிருக்கும் சி.பி.ராதாகிருண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
பாமக தலைவர் அன்புமணி: சி.பி. ராதாகிருஷ்ணன், எதிர்பார்க்கப்பட்ட வாக்குகளைவிட கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பது மக்கள் பிரதிநிதிகள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
இதேபோல், தமாகா தலைவர் ஜி.கே வாசன், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், வேல்ஸ் பல்கலைக்கழக தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.