சென்னை: பாதிக்கப்பட்டவர்களுக்கு திமுக அரசு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கீழதாயில் பட்டியில் உள்ள ஹிந்துஸ்தான் (ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ்) பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து சுமார் ஒரு மணி நேரமாக வெடித்துச் சிதறி உள்ளது. அருகில் உள்ள பட்டாசு ஆலைக்கும் தீ பரவிய நிலையில் அங்குள்ள பட்டாசுகளும் வெடித்துச் சிதறியுள்ளன.
தேமுதிக சார்பாக விருதுநகர் மாவட்ட கழக செயலாளர் செய்யது காஜா செரிப் மற்றும் கழகத்தினர், சிவகாசி மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருட்களை அளிக்க இருக்கிறார்கள். பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த உரிமம் ரத்து என்பது கண் துடைப்பாக இல்லாமல் இனி வரும் காலங்களில் விருதுநகர் மாவட்டம் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் எங்குமே பட்டாசு ஆலை விபத்துக்களோ, உயிர் இழப்புகளோ நடக்காத வண்ணம் அரசு சட்டத்தையும், அரசாணையையும் (GO) பிறப்பிக்க வேண்டும்.
பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து என்பது விருதுநகர் மாவட்டத்திற்கே ஒரு சாபக் கேடாக உள்ளது. தமிழக அரசு பட்டாசு தொழிற்சாலைக்கு என்று தனிக் கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் விபத்துகள் நடக்காத வண்ணம் பாதுகாக்க வேண்டும். அப்பாவி மக்கள் தங்கள் உயிர்களைப் பணையம் வைத்து வாழ்வாதாரத்திற்காக பட்டாசு ஆலைகளில் பணிக்குச் செல்கிறார்கள்.
அவர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் காப்பீடு (insurance), குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அதேபோல் பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துகள் இனிமேலும் நடக்காத வண்ணம் பாதுகாத்துக் கண்காணிக்க வேண்டும்.
மேலும் இறந்தவர்களுக்கும், படுகாயம் அடைந்தவர்களுக்கும் தனியார் பட்டாசு (ஸ்டாண்டர்ட் பயர் ஒர்க்ஸ்) ஆலை உரிமையாளர்கள் மற்றும் தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். இறந்தவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக் கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.