சிவகங்கை: “அதிமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கீழடி அகழாய்வுப் பணிகள் தொடங்கின. அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய அரசுக்கு தெளிவாக விளக்கமளித்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சிவகங்கையில் உள்ள கீழடி அகழ் வைப்பகத்தை எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் தான் முதன் முதலாக கீழடி அகழாய்வு பணிகள் தொடங்கின. முதல் மூன்று கட்ட அகழாய்வுகளை கடந்த 2015 முதல் 2017 வரை மத்திய அரசு நடத்தியது. நான்காம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியில் துறை அனுமதி பெற்று 2018-ல் அதிமுக அரசு மேற்கொண்டது. கடந்த 2019-ல் 5-ம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.
அதிமுக ஆட்சியில் தான் கீழடியில் 5 கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கிடைத்த தொல்பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.5 கோடியில் கீழடி அகழ்வைப்பகம் அமைக்க அடிக்கல் நாட்டினோம். அதன் பிறகு தான் ஆட்சி மாற்றம் வந்தது.
அதிமுக அரசு 6 கரிம மாதிரிகளை அமெரிக்கா நாட்டில் புளோரிடா ஆய்வகத்துக்கு அனுப்பியதில், கீழடி நாகரிகத்தின் காலம் கிமு 6-ம் நூற்றாண்டு என உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2018-ல் நான் சட்டப்பேரவையில் பேசியபோது, ‘கீழடி ஆய்வு நம் பாரம்பரிய பெருமையை உணர்த்துவதில் முக்கிய பங்காற்றுகிறது’ என குறிப்பிட்டேன். அதிமுக அரசு, அமெரிக்கா சிகாகோ நகரில் உலகத் தமிழ் மாநாடு நடத்த நிதியுதவி செய்தது. அங்கு முதன்முறையாக கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தினோம். அந்த கண்காட்சிக்கு ‘கீழடி என் தாய்மடி’ என பெயரிடப்பட்டது.
மேலும் 6,720 தொல்பொருட்களை மதுரை உலகத் தமிழ் சங்க வளாகத்தில் வைத்து கண்காட்சியை தொடங்கி வைத்தோம். கடந்த 2020-ல் சென்னை புத்தக கண்காட்சி அரங்கத்திலும் கீழடி தொல் பொருட்களை காட்சிக்கு வைத்தோம். ஆனால் கீழடியை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.
தொல்லியல் துறைக்கு அதிமுக அரசு 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.105 கோடி நிதி ஒதுக்கியது. தமிழகத்தில் நடந்த 39 அகழாய்வுகளில் 33 அகழாய்வில் அதிமுகவுக்கு பங்கு உண்டு. மைசூரில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்த 10,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை தமிழகத்துக்கு கொண்டு காட்சிப்படுத்திய பெருமை அதிமுக அரசுக்கு உண்டு.
கீழடி அகழாய்வு மிக முக்கியமானது. இதில் எந்த தவறும் நடந்துவிடக் கூடாது. கீழடி அகழாய்வு அறிக்கையில் மத்திய அரசு என்ன விளக்கம் கேட்டது? . திமுக அரசு என்ன விளக்கம் கொடுத்தது என்பது பற்றி எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. அதற்கு சரியான விளக்கத்தை கொடுத்து கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது திமுக அரசின் பொறுப்பு. கீழடி ஆய்வுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு. கீழடி விவகாரத்தில் மாநில அரசின் முயற்சிகளுக்கு நாங்கள் துணை நிற்போம்.
தமிழகத்தில் 196 அரசு கலை கல்லூரிகளில் 96-ல் மட்டுமே முதல்வர்களே இல்லை. பல கல்லூரிகளில் பேராசிரியர்களோ, மற்ற பணியாளர்களோ இல்லை. மருத்துவத் துறையிலும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. டீன்களே நியமிக்க முடியவில்லை.
2021-ல் திமுக தேர்தல் அறிக்கையில் 5 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறி நிரப்புவதாக கூறினார்கள். திமுக ஆட்சியில் 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை மட்டுமே நிரப்பி உள்ளனர். காலிப்பணியிடங்கள் அதிகரித்ததால் நிர்வாகம் முறையாக செயல்பட முடியவில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னடைவு அடைந்திருப்பதற்கு இந்த அரசு முறையாக செயல்படாததே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.