புதுடெல்லி: கீழடி அகழாய்வு குறித்த திருத்தப்பட்ட அறிக்கை ஏதும் கோரப்படவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று எழுத்துப் பூர்வமாக வெளியிட்ட தகவல்: “கீழடி அகழாய்வு குறித்த திருத்தப்பட்ட அறிக்கை எதையும் தமிழ்நாடு தொல்லியல் துறையிடமிருந்து இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரவில்லை. 2018ம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறை கீழடியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் நிதியுதவி ஏதும் வழங்கவில்லை.
பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள் 1959-ன் படி அகழாய்வுக்கு இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனம் அனுமதி அளிக்கிறது. மாநில தொல்லியல் துறை உட்பட எந்தவொரு முகமையும் தேவையெனக் கோரும்பொழுது தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.