சென்னை: கீழடி விவகாரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள் என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழகத்தை ஆளும் திமுக, தங்களது ஊழல், முறைகேடுகளையும், குடும்ப ஆதிக்கத்தையும் மறைப்பதற்காக, பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை துண்டாட வேண்டும் என்ற பிரிவினைவாத உள்நோக்கத்துடன் பிறந்த கட்சி தான் திமுக. அதனால் பிரிவினைவாத அரசியல் அக்கட்சிக்கு கைவந்த கலையாகிவிட்டது.
கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’, ‘ஆரியம் – திராவிடம்’, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு என்று சொல்லியே பிழைப்பு நடத்தி வரும் கட்சி தான் திமுக. இப்போது சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடத்தப்பட்ட அகழாய்வை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்கு திமுக பயன்படுத்தி வருகிறது. கீழடி அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அனுப்பிய ஆய்வறிக்கையை வெளியிட மேலும் , சில அறிவியல் தரவுகளை, மத்திய தொல்லியல் துறை கேட்டுள்ளது. எந்தவொரு ஆய்விலும் அதை ஏற்க வல்லுநர்கள் மேலும், மேலும் அறிவியல் ரீதியான தரவுகளை, விளக்கங்களை கேட்பது வழக்கமான ஒன்றுதான்.
அகழாய்வு போன்ற வரலாற்றை தீர்மானிக்கும் முக்கியமான ஆய்வுகளில், எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டாலும் அதற்கு விளக்கம் அளிக்க, ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள் தயாராகவே இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் அதிகம் கேள்விகள் கேட்க வேண்டும் என்றே விரும்புவார்கள். அப்போதுதான் அவர்களது ஆய்வை உலகம் ஏற்கும்.

ஆனால், தமிழகத்தில் அதற்கு நேர் எதிராக நடக்கிறது. ‘நான் கொடுத்த ஆய்வறிக்கையை அப்படியே ஏற்க வேண்டும்’ என ஒருவர் கூறுவதும், அதற்கு திமுக அரசு முட்டுக் கொடுத்து, ‘தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு’ என பிரிவினைவாதம் பேசுவதும் நடக்கிறது.
இந்நிலையில் தமிழகம் வந்த மத்திய தொல்லியல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், “நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை. உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, இன்னும் அறிவியல் பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.
அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
தமிழ்நாடு பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பிரிவினை உணர்வுகள் மூலம் அல்லாமல், நேர்மையான அறிவின் மூலம் அதன் பாரம்பரியத்தை பெருமைப்படுத்த வேண்டும்” என தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
‘தூங்குபவரை எழுப்பலாம், தூங்குவதை போல நடிப்பவரை எழுப்ப முடியாது’ என்பார்கள். அதுபோலத் தான், மத்திய அமைச்சர் மிக தெளிவான விளக்கத்தை அளித்த பிறகும், “எங்கள் வரலாற்றை வெளிக் கொணர பல நூற்றாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் முயற்சிக்கிறார்கள்” என, மீண்டும் மீண்டும் பிரிவினைவாத அரசியலை முதல்வர் ஸ்டாலின் செய்கிறார்.
எத்தனை தரவுகள் கேட்டாலும் அதை கொடுக்க தொல்லியல் ஆய்வாளர்கள் தயாராகவே இருப்பார்கள். அதை ஏன் முதல்வர் ஸ்டாலின் தடுக்க வேண்டும் ? தங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக அகழாய்வு முடிவு இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறாரா ? கீழடி அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை மட்டுமல்ல, பல்வேறு அறிஞர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். கரித் துண்டின் காலத்தை மற்ற பொருட்கள் மீது நிர்ணயிக்க, போதுமான தரவுகளை கேட்டுள்ளனர். அதற்கு பதில் இல்லை.
ஆய்வு என்றால் ஆயிரம் கேள்விகள் இருக்கும். அத்தனைக்கும் பதில் சொல்லிவிட்டு அடுத்த கேள்வியை எதிர்பார்ப்பவரே ஆய்வாளர். கீழடி அகழாய்வு குறித்து மத்திய தொல்லியல் துறை கேட்ட அத்தனைக்கும் தரவுகள் கொடுத்து விட்டோம். மத்திய தொல்லியல் துறையிடம் இனி கேள்விகள் இல்லை என முதல்வர் ஸ்டாலின் கூறினால் அதை ஏற்கலாம். எனவே, கீழடி விவகாரத்தில் பிரிவினைவாத அரசியல் செய்யாமல் அதை ஆய்வாளர்களிடம் விட்டுவிடுங்கள்.”ச்என்று ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியுள்ளார்.