சென்னை: கீழடியை வைத்து திமுக அரசு அரசியல் செய்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த இயக்கம் அதிமுக. கீழடியை வைத்து அரசியல் செய்யும் இயக்கம் திமுக. கீழடிக்கு ஒரு பைசா கூட செலவு செய்யாத ஆட்சி திமுக ஆட்சி. கீழடி விவகாரம் வந்த பிறகு அகழ்வாய்வு துறை தொடங்கியது போன்று திமுக கட்டமைக்கிறது.
தமிழகத்தில் இதுவரை 39 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இதில் அதில் 33 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய உத்தரவிட்டது அதிமுக அரசு. ஈரோடு அடுத்த கொடுமணலில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்பை பதனம் செய்து தமிழன் பயன்படுத்திய சான்று கிடைத்துள்ளது. இதை ஏதோ தானே வந்து கண்டுபிடித்தது போன்று ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளார். அந்த கொடுமணல் அகழாய்வு திட்டத்துக்கு முதலில் நிதி ஒதுக்கியது பழனிச்சாமி ஆட்சியில் தான்.
‘கீழடி என் தாய்மடி’ என்ற வார்த்தையை நான் தான் உருவாக்கினேன். எம்ஜிஆரும், ஜெயலலிதாவுக்கும் பிறகு அமெரிக்காவில் முதன்முறையாக உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியது பழனிச்சாமி தான். பாண்டிய நாட்டின் மிக முக்கிய துறைமுகமாக இருந்த அழகன்குளத்தில் 3 முறை அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 8 அகழ்வாய்வுகள் நடக்கின்றன.
இவற்றுக்கெல்லாம் வித்திட்டது பழனிசாமி தான். திமுக அரசு 2006- 2011 வரை கீழடியில் அகழ்வாய்வு செய்ய கோரிக்கை வைத்தும் அன்றைய முதல்வர் கருணாநிதி ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. அந்த ஆட்சியில் அகழ்வாய்வு துறைக்கு வெறும் ரூ.9 கோடி மட்டும்தான். பழனிசாமி தலைமையிலான 4 ஆண்டு ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.105 கோடி ஒதுக்கியுள்ளார்.
கீழடியில் கிடைத்த பொருட்களை ஆய்வுசெய்து, கிபி 5-ம் நூற்றாண்டு முதல், கிமு 5-ம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என அறிக்கை அளித்தால், 1000 ஆண்டில் எந்த ஆண்டு என மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு சரியான பதிலை அளிக்க வேண்டும். கீழடியை கண்டுபிடித்தது ஸ்டாலின் தான் என கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.