சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணை கட்டுவதற்காக, வனப்பகுதி கிராமங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேஆர்பி அணை கட்டும்போது வனப்பகுதி கிராமங்களான கொத்துப்பள்ளி, கொட்டாவூர் கிராம மக்களை அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அங்கு வசித்தவர்கள் சூலகிரி தாலுகாவில் உள்ள துரிஞ்சிப்பட்டி மற்றும் கோட்டையூர் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கொண்ட இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி அங்கிருந்து வெளியேறும்படி வனத்துறையினர் பொதுமக்களை நிர்பந்தம் செய்ததை எதிர்த்து அந்த கிராமங்களைச் சேர்ந்த 272 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதில், “கேஆர்பி அணை கட்டுவதற்காக எங்களது முன்னோரை தமிழக அரசு 70 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கிருந்து அப்புறப்படுத்தி தற்போது வசிக்கும் கிராமத்தில் குடியமர்த்தியது. இந்த கிராமங்களில் நாங்கள் அன்றாடம் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். இந்த கிராமங்களைத் தவிர்த்து வேறு எங்கும் செல்ல முடியாத நிலையில் வீடுகளைக் கட்டி வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு முறையான மின் இணைப்பு பெறப்பட்டு, சொத்து வரியும் செலுத்தி வருகிறோம்.
நாங்கள் குடியிருக்கும் வீடு மற்றும் விவசாயம் செய்யும் நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கடந்த 2023-ம் ஆண்டு விண்ணப்பித்தும் பட்டா வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். தற்போது நாங்கள் குடியிருக்கும் கிராமங்களை பஞ்சாயத்தில் இருந்து விடுவித்து வனத்துறை என அறிவித்து மாவட்ட ஆட்சியர் கடந்த 1975-ம் ஆண்டு மார்ச் 22 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் அந்த உத்தரவை சுட்டிக்காட்டி எங்களை கிராமங்களை விட்டு வெளியேறும்படி வனத்துறை அதிகாரிகள் அச்சுறுத்தி வருகின்றனர்.
விவசாயம் செய்யக்கூடாது எனவும் நிர்பந்தம் செய்து வருகின்றனர். எனவே கடந்த 70 ஆண்டுகளாக எங்களது கட்டுப்பாட்டில் உள்ள நிலத்துக்கு பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி, “மனுதாரர்கள் ஏற்கெனவே அணை கட்டுவதற்காக அவர்கள் வசித்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அங்கிருந்தும் வெளியேறும்படி கூறுவது தவறானது. தற்போது மனுதாரர்கள் வசிக்கும் இந்த கிராமங்களை வனத்துறையிடம் ஒப்படைத்தது சட்ட ரீதியாக தவறு.
கடந்த 70 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க ஓசூர் சார்ஆட்சியர் கடந்தாண்டு டிச.31 அன்று கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். எனவே அதன் அடிப்படையில் மனுதாரர்களுக்கு பட்டா வழங்க ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும்,” என வாதிட்டனர். இதையேற்ற நீதிபதி, மனுதாரர்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் 8 வார காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.