கிராமப் புறங்களுக்கு அனைத்து நாட்களிலும் மினி பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்கும் பேருந்து வசதியை ஏற்படுத்தும் நோக்கில் 1997-ம் ஆண்டு மினி பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் விரிவுபடுத்தப்பட்ட மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தஞ்சாவூரில் தொடங்கிவைத்தார். அதன்படி, 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் குக்கிராமங்களை நகரப் பகுதிகளுடன் இணைக்கும் வகையில், அதிகபட்சமாக வழித்தட தூரத்தை 25 கி.மீ. நீட்டிப்பு செய்து, அதில் பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடங்களில் 65 சதவீத பேருந்துகளை இயக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3,103 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழக மக்களுக்கு பேருந்து இயக்கப்படாத 25,708 கி.மீ. நீளத்துக்கு புதிதாக பேருந்து வசதி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கெனவே மினி பேருந்துகள் இயக்கத்தில் உள்ள பிரச்சினைகளை களைய வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
கிராமங்களில் ஏற்கெனவே அரசு அல்லது தனியார் பேருந்து இருக்கக் கூடிய நேரத்தையொட்டியே மினி பேருந்து நேரத்தையும் பெற்றுக் கொண்டு, அந்த பேருந்துகளுக்கு சில நிமிடங்கள் முன்னதாக மினி பேருந்துகளை இயக்கும் நிலை பல பகுதிகளில் உள்ளது. இதனால், மக்களுக்கு பெரிதும் பயனில்லை. மேலும், சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்கள், பள்ளி கோடை விடுமுறை நாட்களில் லாபம் இல்லை என்ற காரணத்தால் மினி பேருந்து இயக்கப்படாத நிலை உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரை செம்பனார்கோவில், பொறையாறு, சங்கரன்பந்தல், திருவெண்காடு, திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிராமப் பகுதிகள் வழியாக இயக்கப்படும் மினி பேருந்துகள் விடுமுறை நாட்களில் இயக்கப்படுவதில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
இது குறித்து மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அ.அப்பர் சுந்தரம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: மினி பேருந்து திட்டமும் அதன் விரிவாக்கமும் வரவேற்க கூடிய ஒன்று. தனியார் மினி பேருந்துகள் இயக்கப்படுவதை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். ஆனால் விடுமுறை நாட்களில் சேவை இல்லாதபோது மிகவும் சிரமப்படுகின்றனர். கிராமப் புறங்களில் மினி பேருந்துகள் இயக்கப்படுவது என்பது மாணவர்களுக்காக மட்டுமல்ல. அனைத்து தரப்பு மக்களின் பல்வேறு தேவைகளுக்காகவும்தான் இயக்கப்படுகிறது. எனவே, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை களைந்து தொடர்ந்து பேருந்துகளை இயக்க வேண்டும் என்றார்.
இது குறித்து மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கதிர்வேலு கூறியது: அனைத்து நாட்களும் மினி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். விடுமுறை நாட்களில் இயக்கப்படாமல் இருப்பது குறித்த புகார்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளுக்கான நேரம்(timing) 1999-ல் கொடுக்கப்பட்டதுதான். தற்போது விரிவாக்கப்பட்ட திட்டத்தின் படி போக்குவரத்துக்கான கி.மீ. தொலைவு அதிகப்படுத்தப்பட்டுள்ளதால், நேரம் சார்ந்த பிரச்சினை வருவதற்கான வாய்ப்பு குறைவு என்றார்.