சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸில் 23,600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னையில் 2015-ம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிக மழை கிடைக்கும் காலங்களிலும், பெரு வெள்ளத்தின்போதும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பதற்காக, சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார திட்டமிட்டது.
அதன்படி மாநகரம் முழுவதும் நடத்திய ஆய்வில் மொத்தம் 210 நீர்நிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை பல்வேறு நிதிகளின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் புனரமைத்துள்ளது. அதன்படி, அவற்றில் கழிவுநீர் கலப்பது, குப்பைகள் கொட்டுவது தடுக்கப்பட்டுள்ளது. நடைபாதைகள், இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, குத்தகை அடிப்படையில் தனியார் வசம் இருந்த கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தை நீர்நிலையாக மாற்றுமாறு, தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசை அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே 26,600 சதுர மீட்டர் பரப்பளவில் 4 புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதை மேலும் விரிவாக்கம் செய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
கிண்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு 4 புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தற்போது அதே பகுதியில் மேலும் 23,600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், சென்னை மாநகரில் உள்ள நீர்நிலைகளை புனரமைப்பது தொடர்பாக ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அலுவலர்களிடம் மாநகர நீர்நிலைகளை மீட்டெடுத்து, புனரமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அவர்களின் பங்களிப்புடன், மாநகர நீர்நிலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.