சென்னை: தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைத்தல் உள்ளிட்ட எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
வேளச்சேரி ஏரியின் பரப்பளவு ஆக்கிரமிப்பால் குறைந்ததாக கூறி, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்க துணைத் தலைவர் குமரதாசன், சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘அரசால் கையகப்படுத்தப்பட்ட கிண்டி ரேஸ் கிளப்பின் 118 ஏக்கரில் ஏரியை உருவாக்கினால் மழை பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்கலாம். இது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.
இந்நிலையில், இந்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பாய உறுப்பினர்களான நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, சத்யகோபால் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ரேஸ் கிளப்பிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்தில், 4 குளங்களை சென்னை மாநகராட்சி உருவாக்கியுள்ளது. இந்த நிலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இதற்காக மாநகராட்சியிடம் நிலம் தற்போது வரை ஒப்படைக்கப்படவில்லை என மாநகராட்சியின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை, அந்த நிலத்தில் எந்த பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது. இவ்வாறு தீர்ப்பாய உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.