காஷ்மீரில் நடந்ததுபோல தமிழகத்தில் நிச்சயம் நடக்கவே நடக்காது. எந்த காரணத்தை கொண்டும், தமிழகத்தில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் காவல், தீயணைப்பு துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசும்போது, ‘‘ஆடிட்டர் ரமேஷ் படுகொலை வழக்கில் இதுவரை நீதி கிடைக்கவில்லை. வெளிநாட்டு தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் கோவை, திருப்பூரில் வங்கதேசத்தினர் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. அங்கு தேசவிரோத குற்றங்கள் நடக்காமல் இருக்க, அந்த மாவட்டங்களை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். காஷ்மீரில் நடந்ததுபோல, தமிழகத்தில் நடந்துவிட கூடாது’’ என்றார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது: ஆடிட்டர் ரமேஷ் கொலை, அதிமுக ஆட்சியின்போது நடந்தது. நீதிமன்றத்தில் அதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. காஷ்மீரில் நடந்ததுபோல தமிழகத்தில் நிச்சயம் நடக்கவே நடக்காது. காஷ்மீரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு பற்றி இதுவரை நாங்கள் பேசவில்லை. அந்த செய்தியை கேள்விப்பட்டவுடன், ‘காஷ்மீர் தாக்குதல் தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும், தமிழகம் நிச்சயம் உறுதுணையாக இருக்கும்’ என்றுதான் கூறியிருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும், தமிழகத்தில் மதவாதம் உள்ளே நுழைய முடியாது.
தமிழகத்தை வளர்ச்சி அடைந்த நாட்டுடன் ஒப்பிட வேண்டும் என்று பேசிய வானதி சீனிவாசனுக்கு நன்றி. அதே நேரம், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுவதற்கு ஏற்ப இன்னும் பல திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், தமிழக அரசுக்கு மத்திய அரசின் நிதி வராமல் உள்ளது. நீங்கள் தயவுசெய்து உங்கள் தலைமையிடம் சொல்லி, அந்த நிதியை பெற்றுத்தர குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.