திருச்சி:‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்குச் செல்லும் வழியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி பாலத்தில் விவசாயிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர்.
விவசாயிகளைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச்சொல்லி கீழே இறங்கிய பழனிசாமி, விவசாயிகள் ஒரு தட்டில் வைத்து வழங்கிய நெல் மணிகள் மற்றும் பூக்களை காவிரி ஆற்றில் தூவி காவிரியை வணங்கினார். அப்போது விவசாயிகள், ‘’காவிரி மற்றும் துணை ஆறுகளை சுத்தப்படுத்தும் வகையில், ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைக் கொண்டுவந்தீர்கள். மத்திய அரசிடம் பேசி இந்த திட்டம் நிறைவேறுவதற்கு முன்னெடுப்பு செய்தீர்கள். இந்த திட்டம் நிறைவேறினால் சாயக்கழிவு, கழிவுநீர் போன்றவை ஆற்றில் கலந்து நீர் மாசுபடுவது முழுமையாகத் தடுக்கப்படும். இதன் மூலம் நீர் ஆதாரமும் மேம்படும். மத்திய அரசுடன் இணைந்து நடந்தாய் வாழி காவிரி திட்டம் கொடுத்த உங்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதோடு காவிரி ஆற்றில் தடுப்பணை கட்டி நீர் சேமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம் பேசிய பழனிசாமி, “ஏற்கனவே ஆதனூர், குமாரமங்கலம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் அதிமுக ஆட்சியில் தடுப்பணை கட்டியிருக்கிறோம். மேலும் நான்கு தடுப்பணைகள் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து, அதற்கான முதற்கட்டப் பணிகள் துவங்கிய நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த திமுக அரசு திட்டத்தை கைவிட்டு விட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி கடலில் கலக்கும் வரை எங்கெல்லாம் தடுப்பணைகள் அமைக்க முடியும் என்பதை ஆராய்ந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். ஏனெனில், தடுப்பணை கட்டும்போது அந்த இடத்தைச் சுற்றிய நிலங்களும், மக்களும் பாதிக்கப்படக் கூடாது. அதுபோன்ற இடங்களை ஆய்வு செய்தே அமைக்க முடியும். அதனால் முழுமையாக ஆராய்ந்து தடுப்பணை அமைத்துக் கொடுக்கிறேன்” என்று கூறிவிட்டு பேருந்தில் ஏறி புறப்பட்டார்.