சேலம்: காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இது மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் முதல்முறையாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 29-ல் நிரம்பியது. டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீர் திறப்பு காரணமாக, அணையின் நீர் மட்டம் குறைவதும், காவிரியில் வெள்ளம் ஏற்படும்போது, அணை மீண்டும் நிரம்புவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,223 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 7,382 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்துக்காக விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடகாவின் கபினியில் இருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதமும், கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று மாலை 4 மணிக்கு விநாடிக்கு 12 ஆயிரத்து 657 கனஅடியாக அதிகரித்தது.
அணைக்கான நீர்வரத்து வேகமாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கையாக, மேட்டூர் அணையில் இருந்து மாலை 4 மணிக்கு 35 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 6 மணிக்கு 50 ஆயிரம் கனஅடியாகவும் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்பதால் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்பட காவிரி கரையோரத்தில் உள்ள 11 மாவட்டங்களுக்கு நீர்வளத்துறை சார்பில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.