கோவை: காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெறும் மதிமுக மண்டலக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி இன்று (ஜூலை 1) காலை விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. எங்களைப் பொறுத்தவரை எங்களுடைய இயக்கம் குறைந்தபட்ச அங்கீகாரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு குறிப்பிட்ட சீட்டை பெற வேண்டும் என்பது எங்களுடைய ஆசை. ஆனால், இறுதி முடிவு எடுப்பது இயக்கத்தின் தலைமை தான்.
ரயில்வே துறையில் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். சீனியர் சிட்டிசன்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். மத்திய அமைச்சரையும் தனிப்பட்ட முறையில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். பாஜக ஆளும் மாநிலங்கள் இல்லாமல் இதர மாநிலங்களுக்கு உரிய நிதியை வழங்குவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது உண்மைதான்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மும்மொழி கொள்கைக்கு உடன்படாததால் அவர்கள் நிதியை அளிக்கவில்லை. மாணவர்களிடம் அரசியல் செய்யக்கூடாது என்பது தான் எங்களுடைய நிலைப்பாடு. வரக்கூடிய சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும். செப்டம்பர் 15-ம் தேதி திருச்சியில் தமிழகமே திரும்பிப் பார்க்கக் கூடிய மாநாட்டை நடத்த உள்ளோம். தேர்தல் வரக்கூடிய காலம் என்பதால் எங்களுடைய கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
அதற்காக பூத் கமிட்டிகள் அமைப்பது உட்பட ஏழு மண்டலங்களில் செயல்வீரர் கூட்டம் வைத்துள்ளோம். உலகமயமாக்கல் பற்றி பேசும் பொழுது ஆங்கில புலமை இருப்பதால்தான் நம்முடைய மாணவர்கள் பல்வேறு இடங்களில் ஆளுமை செலுத்துகிறார்கள். ஆளுமை எல்லாம் இருமொழிக் கொள்கையினால் தான் வந்தது. மூன்றாவது மொழியை மாணவர்கள் எந்த மொழியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்த படிக்கலாம். மூன்றாவது மொழி இந்திய மொழியாக தான் இருக்க வேண்டும் என்பது தவறு.
ஆங்கில மொழி என்பது அந்நிய மொழி என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்கிறார். ஆங்கிலம் இல்லாமல் நாம் எப்படி இருக்க முடியும்?. உலக தொடர்பு மொழியே ஆங்கிலம் தான். மொழியை வைத்து பாஜக தான் அரசியல் செய்கிறது. இந்த மொழி பிரச்சினை குறித்து நான் கேள்வி எழுப்பியதற்கு தற்பொழுது வரை தமிழக பாஜக தலைமையிடம் இருந்து எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
மூன்றாவது மொழி இந்திய மொழியாக தான் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற பொழுது, வேறு வழியில்லாமல் இந்தி மொழி தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது மறைமுகமாக இந்தியை திணிப்பதாகும். இவ்வாறு அவர் கூறினார்.