திருப்புவனம்: “காவல் துறை சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறிச் செயல்படுகிறது. இந்நிலை நீடித்தால் திமுக ஆட்சி வீழ்ச்சியை எட்டுவது உறுதி” என முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில், போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த மடப்புரம் அஜித்குமார் குடும்பத்தினரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தலைவர் ஒ.பன்னீர்செல்வம் சந்தித்து ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியவது: “காவல்துறை சட்டப்படி செயல்படாமல் கொடூரமான முறையில் தாக்கியதில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்துள்ளார்.
போலீஸாரால் தாக்கப்பட்டு அஜித்குமார் உயிரிழந்தது மருத்துவ அறிக்கை மூலம் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளது. பொதுவாக விசாரணை மனிதாபிமான அடிப்படையில் நடக்க வேண்டும். நீதிமன்றத்துக்குத்தான் சட்டப்படி நீதி வழங்கும் பொறுப்பும், கடமையும் இருக்கிறது. ஆனால், காவல் துறை சட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு அத்துமீறிச் செயல்படுகின்றது. இதற்கு அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். தமிழகத்தில் இந்தச் சூழ்நிலை மாறவில்லை என்றால் திமுக ஆட்சி தனது வீழ்ச்சியை உறுதியாக எட்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவல் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துச் சிறப்பாக ஆட்சி செய்தார். ஆனால், திமுக ஆட்சியில் காவல் துறை அதிகாரிகளின் எண்ணப்படி ஆட்சி நடக்கிறது. இதன்படி நடந்தால் இதுபோன்று ஜனநாயகப் படுகொலை நடக்கும். குற்றவாளிகளை உடனடியாக விசாரித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.
அதிமுக தொண்டர்களின் உரிமையைக் காக்கப் போராடிக்கொண்டிருக்கிறோம். அதிமுகவைத் தொடங்கியபோது எம்ஜிஆர் சட்டவிதியை உருவாக்கி ஆயுட்காலம் வரை நடைமுறைப்படுத்தினார். அதன்பின்னர் 30 ஆண்டு காலம் ஜெயலலிதா வழிநடத்தினார். தமிழகத்தில் பெருவாரியான மக்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர். அனைத்து திட்டங்களையும் நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தின் 52 சதவீத நிதியை மக்களுக்குப் பயன்படுத்தினார். தற்போது அந்த நிலை தமிழகத்தில் இல்லை. யார் முதல்வராக வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்கள்தான்” என்று அவர் கூறினார்.