சிவகங்கை: “காவல் துறையை கூலிப்படையாக மாற்றியுள்ளனர்” என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸார் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரை இன்று (ஜூலை 3) சந்தித்து இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.
பின்னர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம்: “போலீஸார் தாக்கியதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால், மோசமான சூழ்நிலையை புரிந்து கொண்டு 3 நாட்களுக்கு பிறகு தான் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டது, அழுத்தம் கொடுத்தது யார் என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். காவல் துறையை கூலிப்படையாக மாற்றியுள்ளனர்.
நடந்திருப்பது சட்ட விரோதம், தர்ம விரோதம். தவறு நடந்திருப்பதை மன்னிப்புக் கேட்டு முதல்வரே ஒத்து கொண்டுள்ளார். தேவை மன்னிப்பு இல்லை; நடவடிக்கை தான். மொத்தம் 24 காவல் மரணங்கள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மு.க.ஸ்டாலின், கனிமொழி, திருமாவளவன் மற்றும் சமூக போராளிகள் பலர் போராடினர். ஆனால் இந்தச் சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை.
பல்வேறு இடங்களில் இன்னும் விசாரணை கைதிகளை அடித்து துன்புறுத்துகின்றனர். ஓர் எஸ்.பி.யே மக்களை மிரட்டுகிறார். அஜித்குமார் கொலைக்கு பிறகு, கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் சில வழிகாட்டுதல்களை போலீஸாருக்கு வழங்கியுள்ளார். அதில், விநாயகர் சதுர்த்தி விழாவில் வன்முறை வரும் என்று சொல்லியிருக்கிறார். தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய அவரை கண்டிக்கிறோம். விநாயகர் சதுர்த்தி விழாவை இந்து ஒற்றுமை விழாவாக கொண்டாடுகிறோம். இது பிரச்சினையை திசை திருப்பும் செயல்.
கோயில் ஊழியர் இறந்துள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? கோயிலில் பரிகார பூஜை நடத்த வேண்டும். அஜித்குமாரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அறநிலையத் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறையில் வேலை கொடுக்காமல், ஆவினின் வேலை கொடுத்துள்ளனர். வீடு கட்டிக் கொடுக்காமல் இடம் மட்டும் கொடுத்துள்ளனர். சாராய இழப்புக்கு ரூ.10 லட்சம் கொடுத்த அரசு, அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பு வழங்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.