சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம்- ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். சுமார் 35 ஆண்டு கால காவல் துறை அனுபவத்தில் அவர் சிறப்பாக பணி செய்துள்ளார். இந்த அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, காவல் துறை ஆணையம் போல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்றை ஏற்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அடிக்கடி பட்டாசு விபத்துகள் ஏற்பட்டு பெரும் பொருள் இழப்புகள் மட்டும் அல்லாமல் ஏராளமான உயிர் இழப்புகளையும் தமிழகம் சந்தித்து வருகிறது.
இதுபோன்ற விபத்துகள் மற்றும் பேரழிவு தீ விபத்துகளை முற்றிலும் தடுப்பதற்கு தேவையான வழிமுறைகளை இந்த ஆணையம் வழங்கும். அதை அடிப்படையாக வைத்து புதிய கொள்கை முடிவு எடுக்கப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயங்கும்.
அதுமட்டும் அல்லாமல் தீயணைப்பு துறைக்கு தேவையான காலத்துக்கு ஏற்ப மேம்பட்ட நவீன உபகரணங்கள், கருவிகள் வாங்குவது தொடர்பாகவும் இந்த ஆணையம் ஆலோசனைகள் வழங்கும். இந்த ஆணையம் மூலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மேம்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.