சென்னை: மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, காவல் துறையினரின் பணிச்சுமை மற்றும் மன உளைச்சலை கருத்தில் கொண்டு பல்வேறு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை வரையறை செய்து, காவல்துறை தலைமை இயக்குநர், குற்ற வழக்கு தொடர்வு இயக்குநர் மற்றும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில், முக்கியமான வழக்குகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்திரவிடும் வழக்குகளில் மட்டுமே காவல்துறையினரை வரவழைக்க வேண்டும். காவல் துறையினர் நேரடியாக வரத்தேவையில்லாத வழக்குகளில் அவர்களை நீதிமன்றங்களுக்கு வரவைப்பதை அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
காணொளி காட்சி வாயிலாக காவல்துறையினருடன் தொடர்பு: காணொளி காட்சி வாயிலாக காவல் துறையினரை தொடர்பு கொள்வதை நடைமுறைபடுத்த வேண்டும்.. இதற்கான வசதியை காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஏற்படுத்திர தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின்னணு முறையில் வழக்கு விவரங்கள் பரிமாற்றம்: வழக்குகளின் தன்மையைப் பொறுத்து தேவைப்படும் வழக்கு விவர குறிப்புகளை , சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மின்னணு முறையில் அனுப்ப வேண்டும். காவல்துறையினர் பூர்த்தி செய்த விவரங்களை தேவையான ஆவணங்களை இணைத்து மின்னஞ்சல் அல்லது பிற இணையவழி மூலம் சம்பந்தப்பட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்த விபரங்கள் முழுமையாக இருப்பதை சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் காவல் துறையினர் அவர்களது காவல் நிலையத்திலிருந்து நீதி மன்றத்திற்கு பயணம் மேற்கொள்வது மற்றும் இதனால் ஏற்படும் நேர விரயம் தவிர்க்கப்படும்.
மாவட்டங்களில் காவல்துறை பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் மேற்பார்வை: மாவட்ட வாரியாக காவல் துறை பொறுப்பளார்களை உயர் நீதிமன்றத்தின் சென்னை மற்றும் மதுரை அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகங்களில் நியமித்து அந்தந்த மாவட்ட காவல் நிலையங்களில் இருந்து வரும் மின்னஞ்சல் மற்றும் பிற ஆவணங்களை பெற்று, சரியாக.பூர்த்தி.செய்யப்பட்டுள்ளதா, தேவையான ஆவணங்கள் வரப்பெற்றுள்ளதா என்பதனை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர்களிடம் வழங்கவேண்டும். இவர்களது பணியை காவல்துறை தலைமை இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் “நீதிமன்றப்பிரிவு” மேற்பார்வையிட வேண்டும்.
மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: காவல்துறை தலைமை இயக்குநர் மேற்படி வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து மாவட்டங்களில் செம்மையாக செயல்படுத்த காவல்துறை ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இது சம்பந்தமாக சம்மந்தப்பட்ட அனைத்து காவல் துறையினருக்கும் உரிய அறிவுரைகளை அனுப்பி வைக்குமாறு காவல்துறை இயக்குநர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
தகவல் வழங்கத் தவறினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மரியாதையான அணுகுமுறை. காவல்துறையினர் உரிய தகவல்களை தர தவறும் பட்சத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் காவல்.அதிகாரிகளை கடிந்துகொள்ளாமல் அவர்களின் மேலதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற வேண்டும். மேலும் அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள் காவல்துறையினரை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என அரசு குற்றவியல் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.