மதுரை: தமிழக காவல்துறையில் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகளை வேறு மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஓ.ஹோமர்லால், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு கொலை வழக்குகளில் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக கைது செய்யப்படாமல் உள்ளனர். முக்கிய வழக்குகளில் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படுவதில்லை. இதற்கு காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் உறவினர்களாகவும், நண்பர்களாகவும் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.
குறிப்பாகக் குமரி மாவட்டத்தில் 13 ஆண்டுக்கு முன்பு வனத்துறை ஊழியர், அவர் மனைவி இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியிலிருந்த குண்டு போலீஸார் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் பயன்படுத்தியது ஆகும். இருப்பினும் இது தொடர்பாக இப்போது வரை முழுமையாக விசாரணை நடத்தவில்லை. அந்த வழக்கில் உண்மை குற்றவாளிகளும் கைது செய்யப்படவில்லை. காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து அதிகளவில் நடைபெறுகிறது. புகார் அளிப்பவர்கள் மீதே பொய் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.
கடந்த 2000-ம் ஆண்டில் தேங்காய் பட்டிணம் வெடி குண்டு வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன் ஆணையம், குமரி மாவட்ட காவல்துறையில் கீழ்மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை பணிபுரிபவர்கள் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இது காவல்துறையின் பணியில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்கும், ஆதாரமுள்ள மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் இடமளிப்பதாக உள்ளது. காவல்துறையின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டையும் மிகவும் பாதிக்கிறது. இதைத் தவிர்க்க வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும் எனப் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு காவல்துறையில் பணிபுரிபவர்களை சொந்த மாவட்டத்தில் பணி ஒதுக்கீடு கூடாது என 2000-ம் ஆண்டில் மார்ச் மாதம் அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை முறையாகச் செயல்படுத்தப்படவில்லை. இதனால் குற்றங்கள் தொடர்வதும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதும் தொடர்கிறது.
குமரி மாவட்ட காவல் நிலையங்களில் தற்போது காவல் ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள் இதே மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்றவர்கள். தேர்தல் காலத்தில் மட்டும் ஒரு சில மாதங்கள் வெளி மாவட்டங்களில் பணிபுரிந்து விட்டு மீண்டும் சொந்த மாவட்டத்துக்கு வந்துவிடுகின்றனர்.
எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொய் வழக்குப் பதிவு செய்வதைத் தவிர்க்கவும், முக்கிய குற்றவாளிகள் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதைத் தடுக்கவும் சொந்த மாவட்டங்களில் பணிபுரியும் காவல்துறையினரை வெளி மாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யவும், அந்தந்த மாவட்டங்களுக்கு வெளிமாவட்ட போலீஸாரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வக்குமார் வாதிட்டார். மனு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, குமரி மாவட்ட எஸ்பி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.