மதுரை: காவல் துறையில் தேர்வாகி 2 ஆண்டாக பணி நியமன ஆணைக்கென காத்திருப்பதாக புதிய எஸ்ஐ-க்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
தமிழக காவல் துறையில் காலியிடங்களை நிரப்ப புதிய எஸ்ஐ பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு 2023 மே மாதம் வெளியானது. தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் சார்பில், இதற்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 26, 27-ம் தேதி நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு நவம்பரில் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டோருக்கு 2024 ஜனவரியில் நேர்காணல், சான்றிதழ்கள் சரிபார்த்தல் முடிந்து ஜன.30-ல் இறுதி ரிசல்ட் வெளியிடப் பட்டது. தொடர்ந்து பிப்ரவரியில் மருத்துவச் சோதனையில் தேர்வான சுமார் 750-க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வில் பங்கேற்று வாய்ப்பு கிடைக்காத ஒருவர், புதிய எஸ்ஐ பணிக்கான தேர்வில் முறையில் இன சுழற்சி விதிமுறை சரியாக பின்பற்றவில்லை என, கூறி உயர் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மதிப்பெண் அடிப்படையில் மீண்டும் உடல் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் சுமார் 300 பேர் புதிதாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பு நடந்த தேர்வில் தேர்வான 41 பேர் தகுதியிழப்பு செய்து வெளியேற்றப்பட்டனர். இவர்கள் தங்களை வெளியேற்றியது தவறு, எங்களை தேர்வு பட்டியலில் சேர்க்க வேண்டும் என, வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையில், இந்த விவாகாரத்தில் தனி நபர் ஆணையத்தை நீதிமன்றம் அமைத்தது. எஸ்ஐ தேர்வில் கூறப்படும் குளறுபடி, குழப்பத்தை சரிசெய்து 2025 ஜூலைக்குள் அரசுக்கு இறுதி அறிக்கை சமர்பிக்க ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஆணையமும் இறுதி அறிக்கை சமர்பித்த போதிலும், இன்னும் பணி வழங்கும் உத்தரவு கிடைக்காமல் சுமார் 750-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டோர் கூறும்போது, “இத்தேர்வில் காவல் துறையில் பணிபுரியும் 25 சதவீத காவலர்கள் உள்ளிட்ட 750 பேர் பணிக்கு தேர்வானபோதிலும், நீதிமன்ற வழக்கு போன்ற பிரச்னையால் 2 ஆண்டாக நியமன ஆணைக்காக காத்திருக்கிறோம். இந்த வேலையை எதிர்பார்த்து சிலர் திருமணம் கூட செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேலான காவலர்கள் உட்பட 50 பேர் பணியை எதிர்பார்த்துள்ளனர்.
இந்த தேர்வு விவாகாரத்தில் நீதிமன்ற அமைத்த தனிநபர் ஆணையம் அறிக்கை வழங்கிய நிலையில், தமிழக அரசு, தமிழக காவல் துறை விரைவில் பணி நியமன ஆணையை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாதிக்கப்பட்டோர் கூறியுள்ளனர்.