சென்னை: தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் ரூ.100.82 கோடியில் கட்டப்பட்டுள்ள காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலைய புதிய கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் காலவாக்கத்தில் ரூ.21.85 கோடியில் கட்டப்பட உள்ள மாநில பயிற்சிக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
300 பயிற்சியாளர்கள் தங்கும் வகையிலான தங்கும் கூடங்கள், பயிற்சி மைதானம், சமையல்கூடம், மாதிரி தீயணைப்பு, மீட்புப் பணி நிலையம், மின்சாரம், சாலை, கழிவுநீர் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் இந்த வளாகம் கட்டப்படவுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக் கோட்டையில் குடியிருப்பு, நிர்வாக கட்டிடம், ஆயுதக்கிடங்கு, பாசறைகள், செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி, தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவிலில் காவல் நிலையங்கள், சென்னை எழும்பூரில் குதிரை லாயங்கள் என ரூ.97.66 கோடியில் கட்டப்பட்டுள்ள 342 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 6 காவல் துறை கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.
திருச்சியை தலைமையிடமாக கொண்ட தீயணைப்புத் துறை மத்திய மண்டலத்தை 2 ஆக பிரித்து ரூ.1.04 கோடியில் விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய மண்டல அலுவலகம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு ரூ.2.12 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.
பள்ளி, விடுதி கட்டிடங்கள்: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் ரூ.3.94 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், விடுதி கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுதவிர, சென்னை ராணிமேரி கல்லூரி, செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, ஒரத்தநாடு, தஞ்சாவூர், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் ரூ.61.44 கோடியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் 1,050 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் 8 சமூகநீதி விடுதி கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும் 23 பட்டதாரி ஆசிரியர்கள், 18 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி வெங்கடராமன், தீயணைப்புத் துறை இயக்குநர் சீமா அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.