சென்னை: காவல்துறையில் 23 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல் துறையினருக்கான பதவி உயர்வு காலவரம்பை குறைப்பதாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டிருந்த அரசாணைப்படி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற 25 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்பதை மாற்றி 23 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் பதவி உயர்வு கால வரம்பானது 2011-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2002 முதல் 2010-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு பணிக்கால வரம்பு குறைப்பு பொருந்தாது.
இது அக்காலகட்டத்தில் பணியில் சேர்ந்த காவலர்களுக்கு செய்யும் துரோகமாகும். முதல்வரின் அறிவிப்பில் இதுபோன்ற நிபந்தனைகள் எதுவும் இல்லாதபோது அரசாணையில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சலுகை என்பது ஏமாற்றமாகும்.
எனவே இந்த அரசாணை தமிழக அரசு திரும்பப்பெற்று, காவலராகப் பணியில் சேர்ந்து 23 ஆண்டுகள் பணிபுரிந்துள்ள அனைத்து காவலர்களுக்கும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு வழங்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.