திருப்புவனம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியதைப்போல் காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, தற்போது இதயமும் கெட்டுவிட்டது என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் திருப்புவனத்தில் பேசினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனிப்படை போலீஸாரால் கொலை செய்யப்பட்ட மடப்புரம் காளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் படுகொலைக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் ஏ. ஆர். மோகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.அர்ச்சுணன், என்.பாண்டி, எஸ்.கே. பொன்னுத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பங்கேற்று பேசியதாவது: “அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் தனது கருத்தில், ஒருவரை கொலை செய்யும் நோக்கம் கொண்டவர்கள் கூட இந்தளவுக்கு தாக்கமாட்டார்கள். மாநில அரசு ஒரு குடிமகனை கொலை செய்துள்ளது என தெரிவித்துள்ளார். அந்தளவுக்கு காவல்துறையினர் கொடூரமாக காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர். தமிழகத்தில் தினமும் நூற்றுக்கணக்கான நகை திருட்டுகள் நடக்கின்றன. அஜித்குமாரை மட்டும் கொலை செய்யும் நோக்கில் அழுத்தம் கொடுத்த அந்த ஐஏஎஸ் அதிகாரி யார் என்ற கேள்விக்கு விடை இல்லை. புகார் கொடுத்த பெண் நிகிதா மீது பல புகார்கள் உள்ளன. காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்யும் அளவுக்கு காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்த மேலதிகாரி யார் என்பதை தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டும்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் மோசடி பேர்வழி. மனித உரிமைகளை காவல்துறை மதிப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டனர். நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை செய்து அறிக்கை அளித்தும் திமுக ஆட்சியில் 3 ஆண்டாக கிடப்பில் கிடக்கிறது. அப்போது ஸ்டெர்லைட் எதிர்த்து போராடிய தற்போதைய முதல்வர் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமாக அதிகாரிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும்போது காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டதாகச் சொன்னார், தற்போது காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல, இதயமும் கெட்டுவிட்டது.
ஏடிஜிபி முதல் சாதாரண காவலர் வரை தவறு செய்கின்றனர். தனிப்படை போலீஸார் என்ற பெயரில் ஒவ்வொரு எஸ்பியும், டிஎஸ்பியும் ரவுடிகளை கொண்டுள்ள தனிப்படையினரை வைத்துள்ளது. அஜித்குமார் கொலை வழக்கு முடியும் வரை சாட்சிகளுக்கு பாதுகாப்பு முக்கியம். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை, வழக்கில் தீர்ப்பு வரும் வரை கைது செய்த போலீஸார் சிறையிலிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர்களை வெளியில் விடக்கூடாது. அஜித்குமார் கொலை வழக்கில் எல்லாருமே சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளனர். அதேபோல் போலீஸாரோடு தொடர்பில் இருந்த கோயில் பணியாளர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும். அஜித்குமார் குடும்பத்திற்கு நீதியும் நிவராணமும் கிடைக்கும் வரை களத்தில் நின்று போராடுவோம்” இவ்வாறு அவர் பேசினார்.
இதில், மாவட்டச் செயலாளர்கள் கே. ராஜேந்திரன் (மதுரை புறநகர்) , மா.கணேசன் (மாநகர்). மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜயராஜன், எஸ். பாலா, தா. செல்லக்கண்ணு, மதுரை துணை மேயர் டி. நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.