திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்த தனிப்படை போலீஸார் தாக்கியதில் மடப்புரத்தைச் சேர்ந்த கோயில் காவலாளி அஜித்குமார் கடந்த ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை விசாரணை நடத்தி, ஜூலை 8-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 2-ம் தேதி முதல் அஜித்குமாரின் உறவினர்கள், கோயில் பணியாளர்கள், பணி நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், போலீஸார் உட்பட பல்வேறு தரப்பினரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதன் அறிக்கை இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
முன்னதாக, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தி ருந்தார். அதன்படி, அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியது தொடர்பான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.