சென்னை: செப்டம்பர் 6ம் தேதி காவலர் நாள் தொடர் நிகழ்ச்சிகளாக சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு சார்பாக வணிக வளாகம் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பொதுமக்களுக்கு சைபர் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும், 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் காவல் குடும்பத்தினரின் ரத்த தானம் வழங்கினர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: “தமிழக முதல்வர் ஏப்ரல் 29ம் தேதி அன்று ”முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும்” என அறிவித்திருந்தார்.
அதன்படி கடந்த 6ம் தேதி அன்று காவலர் நாளையொட்டி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப் பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா வழிகாட்டுதலின் பேரில், மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல குழுக்களாக செப்டம்பர் 6ம் அன்று முதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சிகள் மூலமாக காவலர் நாளின் முக்கியத் துவத்தை எடுத்துக் கூறி பொது மக்களோடு நல்லுறவு ஏற்படும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் காவலர் நாள் தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக செப் 6ம் தேதி, காவலர் நாள் உறுதிமொழி எடுத்தும், சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலைய பிரிவினரால் கடந்த செப்.7 தேதி மாலை சென்னை வேளச்சேரியில் உள்ள ”Phoenix Mall” வணிக வளாகத்திலும், மெரினா கடற்கரை, கண்ணகி சிலை அருகிலும் சைபர் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் பொது மக்களுக்கு சைபர் குற்றத் தடுப்பு சம்மந்தமாக ஆன்லைன் முதலீட்டு மோசடி, டிஜிட்டல் கைது தொடர்பான மோசடி, ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி, வங்கிக் கடன் மோசடி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய வழி குற்றங்கள், கிரிப்டோ கரன்சி மோசடிகள், போலியான முதலீட்டுச் செயலிகள் மற்றும் வலைதளங்களில் பொதுமக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கப் பட்டது. மேலும் சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கி, ஆன்லைன் மோசடியில் சிக்காமல் தவிர்க்க வலியுறுத்தப்பட்டது.
மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நான்கு சக்கர வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரை மூலம் சைபர் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் அங்கு குழுமியிருந்த பொதுமக்களிடம், யாரேனும் இணைய வழி குற்றத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால் உடனடியாக தேசிய இணைய வழி குற்றத் தடுப்பு உதவி எண் ”1930”-க்கு தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது இணைய வழி மூலமாக மனு தாக்கல் செய்ய https.www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதேபோல், காவலர் நாளை முன்னிட்டு இன்று, சென்னை, புதுப்பேட்டை ஆயுதப்படை துணை ஆணையாளர் அலுவலக கலந்தாய்வு கூட்டத்தில், சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை துணை ஆணையாளர்கள் தலைமையில், ரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவல் குடும்பத்தினர் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்துள்ள நிலையில், தொடர்ந்து ரத்த தான முகாம் நடைபெற்று வருகிறது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.