தமிழகத்தில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்கும் அரசாணையை முறையாக அமல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆஸ்டின்பட்டி காவலர் செந்தில்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழக காவல் துறையில் பணிச்சுமை அதிகமாக உள்ளதால் காவலர்கள் ஓய்வில்லாமல் பணிபுரிகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். காவலர்களுக்கு முறையாக விடுப்பு வழங்கப்படுவதில்லை. இதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக காவலர்கள் பொதுமக்களிடம் கோபத்தை காட்டும் சூழல் உருவாகி வருகிறது.
இவற்றை கருத்தில் கொண்டு காவல் துறையில் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரையிலானவர்களுக்கு வார விடுமுறை வழங்குவது தொடர்பாக 2021-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இந்த அரசாணை இதுவரை முறையாக அமல்படுத்தப்படவில்லை. எனவே காவலர்கள் வார விடுமுறை அரசாணையை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு மீது நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: காவல்துறையில் பணிபுரிபவர்களின் உடல்நலத்தையும், குடும்பத்தோடு நேரம் செலவிட்டு, மனநலத்தை பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக முதல்வர் அறிவித்து அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. அந்த அரசாணை முறையாக அமல்படுத்தப்படவில்லை. இதனால் அந்த அரசாணையின் பலன்களை காவல்துறையினர் அனுபவிக்க முடியாத நிலை உள்ளது.
மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. எனவே மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை வார விடுமுறை வழங்குவது தொடர்பாக 2021-ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதில் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.