சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.26) தொடங்கி வைத்தார்.
சென்னை – மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர். காலை 8.30 மணி அளவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மாணவர்களுக்கு உணவு பரிமாறி முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவு செய்து வைத்தனர். பின்னர் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னதாக, முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் சிறப்பை குறிப்பிடும் வகையில் சிறப்பு வீடியோ ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. சுமார் 3.43 நிமிடங்கள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதற்கான காரணம், தொடங்கப்பட்ட நாள், அடுத்தடுத்த விரிவாக்கம், அதன் மூலம் மாணவர்கள் பெற்ற பலன் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.